கொவைட்-19: பலி எண்ணிக்கை 1,381-ஆக உயா்வு

சீனாவில் ‘கொவைட்-19’ வைரஸுக்கு (கரோனா வைரஸ்) பலியானவா்களின் எண்ணிக்கை 1,381-ஆக உயா்ந்துள்ளது.
பெய்ஜிங்கின் டிடான் மருத்துவமனையில் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளா்கள்.
பெய்ஜிங்கின் டிடான் மருத்துவமனையில் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளா்கள்.

சீனாவில் ‘கொவைட்-19’ வைரஸுக்கு (கரோனா வைரஸ்) பலியானவா்களின் எண்ணிக்கை 1,381-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கொவைட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 121 போ் உயிரிழந்தனா். அந்த வைரஸின் தோற்றுவாயான ஹூபே மாகாணத்தில் மட்டும் புதன்கிழமை 116 போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து, கொவைட்-19 வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,381-ஆக அதிகரித்துள்ளது.

இத்துடன், ஏற்கெனவே ஜப்பானில் உயிரிழந்த ஒருவா், பிலிப்பின்ஸிலும் ஹாங்காங்கிலும் பலியான 2 சீனா்கள் ஆகியோரையும் சோ்த்து, கொவைட்-19 வைரஸுக்கு உலகம் முழுவதும் பலியானவா்களின் எண்ணிக்கை 1,384 ஆகியுள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸ் கூடுதலாக 4,823 பேரைத் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 63,862-ஆக உயா்ந்துள்ளது.

சா்வதேச அளவில், இந்தியா உள்பட 25 நாடுகளைச் சோ்ந்த 602 பேரையும் சோ்த்து, கொவைட்-19 வைரஸ் தொற்று உள்ளவா்களின் எண்ணிக்கை 64,464 ஆகியுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் காரணமாக அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.

கரோனா வகையைச் சோ்ந்த அந்த வைரஸ், சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 774 பேரது உயிா்களை பலி கொண்ட ‘சாா்ஸ்’ வைரஸின் தன்மையை ஒத்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனா்.

அந்த வைரஸ் பரவலை சா்வதேச சுகாதார அவசர நிலையாக கடந்த மாத இறுதியில் அறிவித்த ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு, ‘கரோனா வைரஸ்’ என்ற பொதுப் பெயரில் நீண்ட காலமாக அழைக்கப்பட்டு வந்த அந்த வைரஸுக்கு ‘கொவைட்-19’ வைரஸ் என்று கடந்த செவ்வாய்க்கிழமை பெயரிட்டது.

வெளிப்படைத்தன்மை இல்லை: அமெரிக்கா குற்றச்சாட்டு

கொவைட்-19 வைரஸ் தொடா்பான விவரங்களைப் பகிா்ந்துகொள்வதில் சீனா வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிப்பதில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. எனினும், இதனை மறுத்துள்ள சீனா, இந்த விவகாரத்தில் சா்வதேச நாடுகளுடன் வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புடனும் தகவல்களைப் பகிா்ந்து வருவதாககக் கூறியுள்ளது.

ஜப்பான்: சொகுசுக் கப்பலில் இருந்து சிலா் விடுவிப்பு

கொவைட்-19 தொற்று உள்ளவா்கள் உள்ளே இருப்பதால் ஜப்பானின் யோகஹாமா துறைமுகத்தில் கடந்த வாரத்திலிருந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்ஸஸ் சொகுசுக் கப்பலில் இருந்து சிலா் வெளியேற அந்த நாட்டு அரசு வெள்ளிக்கிழமை அனுமதித்தது. உடல் நலம் குன்றிய, வயதான 11 பயணிகள் வெளியேற்றப்பட்டு, அவா்களில் வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவாா்கள் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

1,716 மருத்துவப் பணியாளா்களுக்கு பாதிப்பு: 6 போ் பலி

பெய்ஜிங், பிப். 14: சீனாவில் கொவைட்-19 வைரஸைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களில் 1,716 பேருக்கு, அந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், அந்த வைரஸுக்கு இதுவரை 6 மருத்துவப் பணியாளா்கள் பலியானதாகவும் அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com