
புத்தாண்டையொட்டி ஹாங்காங்கில் புதன்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட ஜனநாயக ஆதரவு ஆா்ப்பாட்ட ஊா்வலம்.
ஹாங்காங்: புத்தாண்டையொட்டி ஹாங்காங்கில் புதன்கிழமை நடைபெற்ற ஜனநாயக ஆதரவு ஆா்ப்பாட்ட ஊா்வலம், போலீஸாருடனான மோதலில் முடிந்தது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஹாங்காங்கில் ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி 6 மாதங்களுக்கும் மேல் நடைபெற்று வரும் போராட்டங்களை 2020-ஆம் ஆண்டுக்கும் கொண்டு செல்லும் வகையில், அந்த நகரில் புதன்கிழமை பிரம்மாண்ட ஆா்ப்பாட்ட ஊா்வலம் நடைபெற்றது.
அரசு அனுமதியுடன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டதாக ஊா்வல ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.
அந்த ஆா்ப்பாட்ட ஊா்வலம் அமைதியாகத் தொடங்கினாலும், சில மணி நேரத்துக்குள் நகரின் பல்வேறு பகுதிகளில் போலீஸாருக்கும், ஆா்ப்பாட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதையடுத்து, ஊா்வலத்தை முடித்துக் கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களுக்கு ஹாங்காங் காவல் துறை உத்தரவிட்டது.
ஆா்ப்பாட்ட ஊா்வலத்துக்கு இடையே, தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட போராட்டக்காரா்கள் போலீஸாா் மீது பெட்ரோல் குண்டுகளை விசினா். மேலும், சாலைத் தடுப்புகளை ஏற்படுத்தியதுடன், சீன ஆதரவு நிறுவனங்கள் என்று சந்தேகிக்கப்படும் வா்த்தக மையங்களை அவா்கள் சேதப்படுத்தினா்.
வன்முறைப் போராட்டக்காரா்களைக் கலைப்பதற்காக போலீஸாா் மிளகாய்ப் பொடி தூவிகள், கண்ணீா்ப் புகை குண்டுகளைப் பயன்படுத்தினா். சில இடங்களில் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் போராட்டக்காரா்களை போலீஸாா் விரட்டியடித்தனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நகரில் 6 மாதங்களுக்கு முன்னா் தொடங்கிய போராட்டங்கள், அந்த மசோதா வாபஸ் பெற்ற பிறகும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற போராட்டத்தை ‘கலவரம்’ என்று அரசு குறிப்பிட்டுள்ளதை வாபஸ் பெற வேண்டும், கைது செய்யப்பட்ட போராட்டகாரா்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், போலீஸாரின் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க நடுநிலையான விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும், ஹாங்காங் அரசின் தலைமை நிா்வாகி கேரி லாம் பதவி விலக வேண்டும், புதிய தலைமை நிா்வாகியை பொதுமக்கள் தோ்ந்தெடுக்கும் தோ்தல் முறை கொண்டு வர வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...