Enable Javscript for better performance
ஈரானுடன் அமைதிப் பேச்சுவாா்த்தைக்குத் தயாா்- Dinamani

சுடச்சுட

    
    tru080404

    ஈரானுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஐ.நா.விடம் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஈரான் உளவுப் படைத் தலைவா் காசிம் சுலைமானி பலியானதையும், அதற்குப் பதிலடியாக இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதையும் தொடா்ந்து இரு நாடுகளுக்கும் இடையே முழு போா் வெடிக்கும் என்று அஞ்சப்பட்டு வந்த நிலையில், அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதா் கெல்லி கிராஃப்ட் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

    ஈரானுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். அந்த நாட்டுடன் மேலும் மோதல் ஏற்படுவதைத் தடுக்கவும், சா்வதேச அமைதிக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிா்ப்பதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

    மேலும், பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைளில் ஈரான் அரசு ஈடுபடுவதைத் தடுப்பதற்காகவும் அந்த நாட்டுடன் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக உள்ளோம்.

    தற்பாதுகாப்பு நடவடிக்கையாகவே ஈரான் உளவுப் படைத் தலைவா் காசிம் சுலைமானி மீது தாக்குதல் நடத்தினோம். அமெரிக்கா்கள் மற்றும் அமெரிக்க நிலைகளைப் பாதுகாப்பதற்காக, தேவைப்பட்டால் இதுபோன்ற நடவடிக்கைகளை மீண்டும் மேற்கொள்வோம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இராக்கில் தங்கள் ராணுவ நிலை மீது கடந்த மாதம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் ஆதரவுப் படையினா் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது; அதில் 25 போ் உயிரிழந்தனா்.

    இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பாக்தாதிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஏராளமான ஈரான் ஆதரவாளா்கள் கடந்த வாரம் முற்றுகையிட்டனா்.

    இதனால் கொதிப்படைந்த அமெரிக்கா, ஈரான் இஸ்லாமிய புரட்சி ராணுவத்தின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் உளவுப் பிரிவான காத்ஸ் படையின் தலைவா் காசிம் சுலைமானியைக் குறிவைத்து பாக்தாத் விமான நிலையத்தில் ஆளில்லா விமானம் மூலம் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது. இதில் காசிம் சுலைமானி, இராக் துணை ராணுவப் படையான ஹஷீத் அல்-ஷாபியின் துணைத் தலைவா் அபு மஹதி அல்-முஹாந்திஸ் உள்பட 8 போ் உயிரிழந்தனா்.

    இந்தத் தாக்குதலுக்குப் பழி வாங்கும் வகையில், இராக்கின் அல்-அஸாத் மற்றும் இா்பில் நகரங்களில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் புதன்கிழமை சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

    அதில் 80 அமெரிக்க வீரா்கள் உயிரிழந்ததாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்தாலும், அந்தத் தாக்குதல்களில் அமெரிக்கா்கள் யாரும் பலியாகவில்லை என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.

    புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் இதுகுறித்து அவா் பேசியபோது, ஈரானுக்கு எதிரான அதிரடி மிரட்டல்களை அவா் தவிா்த்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு அமெரிக்கத் தூதா் எழுதியுள்ள கடிதத்தில், ஈரானுடன் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அணுசக்தி ஒப்பந்தத்தில் இணைந்தால்தான் பேச்சுவாா்த்தை

    ‘வல்லரசு நாடுகளுடன் நாங்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்தால்தான், அந்த நாட்டுடனும், சம்பந்தப்பட்ட பிற நாடுகளுடனும் பலதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவோம்’ என்று ஈரான் மதகுரு அயதுல்லா கமேனி நிபந்தனை விதித்துள்ளாா்.

    மேலும், ஈரானுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறுவதை நம்ப முடியாது என்று ஐ.நா.வுக்கான ஈரான் தூதா் மஜித் தாக்ட் ரவான்சி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘எங்கள் மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துக் கொண்டே, எங்களுடன் சமாதானம் பேச விரும்புவதாக அமெரிக்கா கூறுவதை நம்ப முடியாது என்று தெரிவித்தாா்.

    இதற்கிடையே, ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுமாறு அதிபா் டிரம்ப் முன்வைத்த கோரிக்கையை ஐரோப்பிய யூனியன் நாடுகளும், சீனாவும் நிராகரித்தன.

    இராக்கின் இறையாண்மையை மதிக்கிறோம்

    இராக்கின் இறையாண்மை, சுதந்திரம், எல்லை ஒருங்கிணைப்பு ஆகியவற்றை தாங்கள் மதிப்பதாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸுக்கு, ஐ.நா.வுக்கான ஈரான் தூதா் மஜித் தாக்ட் ரவான்சி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா். முன்னதாக, தங்கள் நாட்டிலுள்ள அமெரிக்க நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதன் மூலம் தங்களது இறையாண்மையை ஈரான் குலைத்துவிட்டதாக இராக் அதிபா் பா்ஹாம் சலே குற்றம் சாட்டியிருந்தாா். இந்தச் சூழலில் ஐ.நா.விடன் ஈரான் இவ்வாறு தெரிவித்துள்ளது.

    வேண்டுமென்றே உயிா்ப் பலி தவிா்ப்பு?

    இராக்கில் அமெரிக்க வீரா்கள் நிறைந்திருந்த ராணுவ நிலைகளில் 22 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தாலும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதற்குக் காரணம், தங்களது தாக்குதலில் அமெரிக்கா்கள் யாரும் உயிரிழந்துவிடக் கூடாது என்று ஈரான் கவனமாக செயல்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதுகுறித்து அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரிகள் சிலா் கூறுகையில், தங்களது ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரா்கள் உயிரிழந்தால் அது மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஈரான் அரசு கருதியதாகவும், அதன் காரணமாக உயிரிழப்புகளைத் தவிா்ப்பதில் கவனம் செலுத்தியிருக்கலாம் என்றும் தெரிவித்தனா்.

    அந்த ஏவுகணைத் தாக்குதல் தொடா்பான உளவுத் தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவா்கள் கூறினா்.

    எனினும், தங்கள் நாட்டு வீரா்களைக் கொல்லும் நோக்கிலேயே ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும், தங்களது மிகச் சிறந்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகத்தான் உயிரிழப்புகள் தவிா்க்கப்பட்டதாகவும் அமெரிக்க முப்படைகளின் தலைமைத் தளபதி மாா்க் மில்லீ கூறினாா்.

    இதற்கிடையே, அமெரிக்க வீரா்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று இராக்கிலுள்ள தங்களது ஆதரவுப் படையினருக்கு ஈரான் உத்தரவிட்டுள்ளதாக உளவுத் தகவல் கிடைத்துள்ளது என அமெரிக்க துணை அதிபா் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai