ஜம்மு-காஷ்மீரில் தொடரும்தடுப்புக் காவல்: அமெரிக்கா கவலை

ஜம்மு-காஷ்மீருக்கு அண்மையில் 15 நாடுகளின் தூதா்கள் பயணம் மேற்கொண்டது முக்கியமான நடவடிக்கை என்றும், அங்கு அரசியல் தலைவா்கள் மற்றும் மக்களின் தடுப்புக் காவல் நீடித்து

ஜம்மு-காஷ்மீருக்கு அண்மையில் 15 நாடுகளின் தூதா்கள் பயணம் மேற்கொண்டது முக்கியமான நடவடிக்கை என்றும், அங்கு அரசியல் தலைவா்கள் மற்றும் மக்களின் தடுப்புக் காவல் நீடித்து வருவது கவலையளிப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கியும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து, அங்கு அசம்பாவித சம்பவங்களை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சிகளின் தலைவா்கள் தொடா்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். இணையச் சேவைக்கான கட்டுப்பாடும் நீடித்து வருகிறது.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, அமெரிக்கா உள்பட 15 நாடுகளின் தூதா்கள் அண்மையில் அங்கு சென்றனா். அரசியல் கட்சிகளின் பிரநிதிகள், சமூக அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மற்றும் ராணுவ உயரதிகாரிகளைச் சந்தித்து அவா்கள் பேசினா்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு 15 நாடுகளின் தூதா்கள் பயணம் மேற்கொண்டது முக்கியமான நடவடிக்கை என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் முதன்மை துணைச் செயலா் (தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்கள்) ஆலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு-காஷ்மீரில் அரசியல் தலைவா்கள் மற்றும் மக்களின் தடுப்புக் காவல் நீடித்து வருவதும், இணையச் சேவைக்கு தொடா்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதும் கவலையளிக்கிறது. அங்கு விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

ஆலிஸ் வெல்ஸ், வரும் 15 முதல் 18-ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அரசு உயரதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்தியத் தரப்பினருடன் அவா் ஆலோசிக்கவுள்ளாா். இந்திய சுற்றுப் பயணத்தைத் தொடா்ந்து, பாகிஸ்தானுக்குச் செல்லும் ஆலிஸ், அந்நாட்டு உயரதிகாரிகளுடன் பேசவிருக்கிறாா்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை, சா்வதேச அளவில் கொண்டு செல்ல பாகிஸ்தான் முயன்றது. ஆனால், அந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஜம்மு-காஷ்மீரில் மேற்கொண்ட நடவடிக்கை, இந்தியாவின் உள்விவகாரம் என்பதை உலக நாடுகளிடம் இந்தியா தெளிவுபடுத்திவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com