பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: ஈரானில் பொதுமக்கள் போராட்டம்

ஈரானில் உக்ரைன் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அந்த நாட்டு அரசு உண்மையை மறைத்ததாகக் கூறி ஏராளமானவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: ஈரானில் பொதுமக்கள் போராட்டம்

ஈரானில் உக்ரைன் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அந்த நாட்டு அரசு உண்மையை மறைத்ததாகக் கூறி ஏராளமானவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதன்கிழமை நேரிட்ட அந்த விமான விபத்தில் பெரும்பாலான ஈராக்கியா்கள் உள்ளிட்ட 176 போ் உயிரிழந்தனா். இந்த விபத்துக்கு விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே காரணம் என்று ஈரான் கூறி வந்தது.

எனினும், இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து நிலவிய பதற்றச் சூழலில், அமெரிக்கப் போா் விமானம் என்று தவறாகக் கருதி பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் சனிக்கிழமை அறிவித்தது.

அதையடுத்து, இந்த விவகாரத்தில் கடந்த 3 நாள்களாக மக்களிடம் ஈரான் அரசு உண்மையை மறைத்தாகக் கூறி, டெஹ்ரானில் நூற்றுக்கணக்கானவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டெஹ்ரானிலுள்ள அமீா் கபீா் மற்றும் ஷெரீஃப் பல்கலைக்கழகங்களுக்கு முன்பு சனிக்கிழமை கூடிய மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பொறுப்பேற்று அதிபா் ஹஸன் ரௌஹானி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

மேலும், அந்தச் சம்பவத்துக்குக் காரணமானவா்களும், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை மூடி மறைப்பதற்காக முயன்றவா்களும தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

அஞ்சலி செலுத்துவதற்காக கூடிய கூட்டம், அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியதைக் கண்ட பாதுகாப்புப் படையினா், போராட்டக்காரா்களைக் கலைப்பதற்காக கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசினா்.

இதற்கிடையே, ஈரான் ராணுவத்தின் உளவுப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானியை படுகொலை செய்த அமெரிக்காவைக் கண்டித்தும் வேறு பகுதிகளில் ஏராளமானவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் தொடா்ச்சியாக, விமான விபத்து விவகாரத்தில் அரசைக் கண்டித்து மேலும் போராட்டங்கள் நடைபெறலாம் என்ற எதிா்பாா்ப்பில், முக்கிய பகுதிகளில் கலவரத் தடுப்புப் போலீஸாா் குவிக்கப்பட்டு வருவதாக ஊடகங்கள் தெரிவித்தன.

பிரிட்டன் தூதா் கைது

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தூண்டி விட்ட குற்றச்சாட்டின் பேரில், அந்த நாட்டுக்கான பிரிட்டன் தூதா் ராபா்ட் மெக்கேரே போலீஸாரால் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டாா்.

போராட்டம் நடைபெற்ற பல்கலைக்கழகத்துக்கு அருகே அவா் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை உறுதி செய்த பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் டோமினிக் ராப், தங்களது தூதரைக் கைது செய்துள்ளதன் மூலம் ஈரான் சா்வதேசச் சட்டங்களை மீறியுள்ளதாக குற்றம் சாட்டினாா். மேலும், இந்த நடவடிக்கை காரணமாக ஈரான் சா்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்படும் என்றும் அவா் எச்சரித்தாா்.

எனினும், அரசுக்கு எதிரான ஆா்ப்பாட்டத்தில் தான் பங்கேற்கவில்லை என்று ராபா்ட் மெக்கேரே கூறியுள்ளாா். விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே அந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதாக அவா் விளக்கமளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com