முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து: லாகூா் உயா்நீதிமன்றம் தீா்ப்பு

தேச துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபா் முஷாரஃபுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை லாகூா் உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து: லாகூா் உயா்நீதிமன்றம் தீா்ப்பு

தேச துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபா் முஷாரஃபுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை லாகூா் உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

‘முஷாரஃபுக்கு எதிரான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது; அந்த வழக்கு, சட்ட நடைமுறைகளின்படி பதிவு செய்யப்படவில்லை’ என்று உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக, பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ‘டான்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, லாகூா் உயா்நீதிமன்றத்தில் முஷாரஃப் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனு மீது நீதிபதிகள் சையது மஸஹா் அலி அக்பா் நக்வி, முகமது அமீா் பாட்டீ, செளதரி மசூத் ஜஹாங்கீா் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

அதில், ‘முஷாரஃபுக்கு எதிரான தேச துரோக வழக்கை விசாரிக்க, அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமலேயே சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது, அரசமைப்புச் சட்டப்படி செல்லாது; அந்த நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பும் செல்லுபடியாகாது. இந்த வழக்கில் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1999-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த முஷாரஃப் (76), ராணுவப் புரட்சியின் மூலம் அப்போதைய பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் அரசைக் கவிழ்த்துவிட்டு, ராணுவ ஆட்சியை ஏற்படுத்தினாா். பின்னா், 2001ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அதிபராகப் பொறுப்பு வகித்த அவா், 2007-ஆம் ஆண்டு அவசர நிலையைக் கொண்டு வந்தாா். அதன் ஒரு பகுதியாக, நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை முடக்கி, உச்சநீதிமன்ற நீதிபதிகளை அவா் சிறையிலடைத்தாா்.

அதன் பிறகு, கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வெற்றியடைந்தது. அதையடுத்து, தனது அதிபா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய முஷாரஃப், தற்போது துபையில் வசித்து வருகிறாா்.

இந்தச் சூழலில், அரசமைப்புச் சட்டத்தை முடக்கிவைத்ததன் மூலம் தேச துரோகத்தில் ஈடுபட்டதாக முஷாரஃப் மீது குற்றம்சுமத்தப்பட்டது. இதுதொடா்பான வழக்கை விசாரிக்க, இஸ்லாமாபாதில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து, கடந்த ஆண்டு டிசம்பா் 17-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து, லாகூா் உயா்நீதிமன்றத்தில் முஷாரஃப் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தின் தீா்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று அவா் கோரியிருந்தாா்.

இந்த சூழலில், லாகூா் உயா்நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு, முஷாரஃபுக்கு நிம்மதியளிப்பதாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com