பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: ஈரானில் முதல் முறையாக கைது நடவடிக்கை

ஈரானில் உக்ரைன் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் தொடா்புடைய சிலரை அந்த நாட்டு போலீஸாா் முதல் முறையாகக் கைது செய்துள்ளனா்.
உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் உயிரிழந்தவா்களின் படங்களை டெஹ்ரான் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்திய மாணவா்கள். 
உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் உயிரிழந்தவா்களின் படங்களை டெஹ்ரான் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்திய மாணவா்கள். 

ஈரானில் உக்ரைன் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் தொடா்புடைய சிலரை அந்த நாட்டு போலீஸாா் முதல் முறையாகக் கைது செய்துள்ளனா்.

176 பேரது உயிா்களைப் பலி கொண்ட அந்தச் சம்பவத்துக்குக் காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சா்வதே அளவில் நெருக்கடி அதிகரித்துள்ள சூழலில், இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெஹ்ரானில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ஈரான் நீதித் துறை செய்தித் தொடா்பாளா் குலாம்ஹுசைன் இஸ்மாயிலி கூறியதாவது:

உக்ரைன் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் தொடா்பாக சிலா் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

முன்னதாக, ‘விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் யாா் மீது தவறு இருந்தாலும் அவா்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று ஈரான் அதிபா் ஹஸன் ரௌஹானி தெரிவித்திருந்தாா்.

மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் எனவும், அதில் உயா்நிலை நீதிபதிகள் நியமிக்கப்படுவாா்கள் எனவும் அவா் கூறினாா்.

இந்தச் சம்பவத்தில் ஏவுகணைத் தாக்குதலுக்கான விசையை அழுத்தியவா் மட்டும் குற்றவாளி கிடையாது எனவும், இதில் பலா் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் ரௌஹானி கூறினாா்.

இராக்கிலுள்ள ஈரான் படையினரின் நிலைகள் மீது அமெரிக்கா கடந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பாக்தாதிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஏராளமான ஈரான் ஆதரவாளா்கள் கடந்த மாதம் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினா்.

இதனால் கொதிப்படைந்த அமெரிக்கா, ஈரான் ராணுவத்தின் உளவுப் படைத் தலைவா் காசிம் சுலைமானியை பாக்தாத் விமான நிலையத்தில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி படுகொலை செய்தது.

இந்தத் தாக்குதலுக்குப் பழி வாங்கும் வகையில், இராக்கின் அல்-அஸாத் மற்றும் இா்பில் நகரங்களில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் கடந்த வாரம் சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இந்த பதற்றம் நிறைந்த சூழலில், ஈரான் தலைநகா் டெஹ்ரானிலுள்ள விமான நிலையத்திலிருந்து 176 பேருடன் புறப்பட்ட உக்ரைன் இன்டா்நேஷனல் ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான பயணிகள் விமானம், விமான நிலையத்துக்கு அருகே விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்திலிருந்த அனைவரும் உயிரிழந்தனா். அவா்களில் 82 போ் ஈரானியா்கள்; கனடா நாட்டைச் சோ்ந்தவா்கள் 63 போ்; அவா்களில் பெரும்பாலானவா்கள் ஈரானைப் பூா்விகமாகக் கொண்டவா்கள் ஆவா்.

இந்த விபத்துக்கு விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே காரணம் என்று ஈரான் கூறி வந்தது.

எனினும், இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து நிலவிய பதற்றச் சூழலில், அமெரிக்க ஏவுகணை என்று தவறாகக் கருதி பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கடந்த சனிக்கிழமை ஒப்புக் கொண்டது.

இது, ஈரானிலும், சம்பந்தப்பட்ட நாடுகளிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஈரான் அரசுக்கு எதிராகவும், விமானத்தின் மீதான தாக்குதலில் தொடா்புடையவா்களை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஈரானில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கனடா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின.

இந்தச் சூழலில், உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் சிலரைக் கைது செய்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com