Enable Javscript for better performance
புதிய அவதாரம் எடுக்கிறார் புதின்!- Dinamani

சுடச்சுட

  

  புதிய அவதாரம் எடுக்கிறார் புதின்!

  By - எஸ்.ராஜாராம்  |   Published on : 18th January 2020 02:30 AM  |   அ+அ அ-   |  

  putin


  ஷியாவின் அரசியல மைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஜன.15-ஆம் தேதி தனது வருடாந்திர உரையில் அதிபர் விளாதிமீர் புதின் சில திட்டங்களை முன்வைத்ததும், அதைத் தொடர்ந்து, பிரதமர் திமித்ரி மெத்வதேவ் மற்றும் அமைச்சரவை ராஜிநாமா செய்ததும் மேலோட்டமாக ஆச்சரியத்தை அளித்தாலும், புதினின் அரசியலை 20 ஆண்டுகளாக உன்னிப்பாகக் கவனித்து வருபவர்களுக்கு எந்த வியப்பையும் தருவதாக இல்லை.

  "ஜனநாயக சீர்திருத்தம்' என புதின் வர்ணித்த அந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களின்படி, நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இனி அதிபருக்குப் பதிலாக நாடாளுமன்றத்துக்கு மாற்றப்படும். மாகாண கவுன்சில் எனப்படும் அமைப்பு, கூடுதல் அதிகாரங்களுடன் வலுப்படுத்தப்படும். அதிபருக்கு ஆலோசனை கூறும் அமைப்பான மாகாண கவுன்சிலுக்கு இதுவரை குறைந்த அதிகாரங்களே உள்ளன. இந்தச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வழிசெய்யும் வகையில்தான் பிரதமர் மெத்வதேவ் தனது பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார். புதிய பிரதமராக மிகயீல் மிஷுஸ்டினை அதிபர் புதின் நியமிக்க, அதை நாடாளுமன்றமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

  ஏற்கெனவே பொருளாதார மந்தம், அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்தி உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும்போது அதிகாரப் பரவலாக்கம் என்கிற முடிவை நோக்கி புதின் தனது நடவடிக்கைகளை முன்னெடுப்பது ஆரோக்கியமானதுதானே என்றால், அதற்குப் பின்னால்தான் மறைந்திருக்கிறது புதினின் அரசியல் என்கின்றனர் விமர்சகர்கள். "எப்போதும் நானே அதிபர்' என்ற புதினின் எதிர்காலத் திட்டத்துக்கான பதில்தான் இந்தச் சீர்திருத்தங்கள் என வெளிப்படையாகப் போட்டுடைக்கிறார் முன்னாள் பிரதமர் மிகயீல் எம்.காஸ்யனோவ்.
  என்ன சிக்கல்?
  ரஷிய அரசியலமைப்புச் சட்டப்படி தொடர்ந்து இருமுறைக்கு மேல் ஒருவர் அதிபர் பதவியில் தொடர முடியாது. அதனால்தான் 2008-இல் தனது அதிபர் பதவி இரண்டாவது முறையாக முடிவடைந்தபோது பதவியை மெத்வதேவுக்கு விட்டுக்கொடுத்து பிரதமர் பதவியை வகித்தார் புதின். மீண்டும் 2012-இல் தேர்தலில் போட்டியிட்டு அதிபராக ஆனார். 2018-இல் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு அதிபர் பதவியை தக்கவைத்தார். அதன்படி பார்த்தால் 2012-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இருமுறை அதிபர் பதவியில் இருக்கும் புதின், 2024-ஆம் ஆண்டு தாமாக பதவியிலிருந்து விலகிவிடுவார். அதன்பிறகும் நாட்டின் முழுமையான அதிகாரத்தை தனது கையில் வைத்திருப்பதற்காகத்தான் இப்போதே புதின் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

  திட்டம் என்ன?
  அதிபருக்கு அதிபர் அல்லது நாட்டின் தலைவர்... இதுதான் புதினின் திட்டம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதிபர் பதவியையும் தாண்டி அதிகாரத்தைத் தக்கவைக்க புதின் என்னவெல்லாம் செய்யக்கூடும் என்பதைப் பார்க்கலாம். அதிபரின் அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்கும் பிரதமருக்கும் மாற்றுவது என்ற புதினின் இப்போதைய திட்டப்படி, புதின் 2024-க்கு பிறகு மீண்டும் பிரதமர் ஆகலாம். அடுத்ததாக மாகாண கவுன்சில் தலைவர் பதவி. அதிபருக்கு ஆலோசனை அளிக்கும் இக்கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரங்களை அளித்து, அதன் தலைவராவதன் மூலம் அதிபருக்கும் மேலான அதிகாரத்தை வைத்திருக்க முடியும்.

  மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானின் அதிபராக நூர் சுல்தான் நீண்டகாலம் பதவியில் இருந்தார். அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளால் பதவியில் தொடர முடியாமல் கடந்த ஆண்டு அதிபர் பதவியை ராஜிநாமா செய்த அவர், அதிபரின் அதிகாரங்கள் அனைத்தையும் பாதுகாப்பு கவுன்சில் என்ற அமைப்புக்கு மாற்றி, 79 வயதிலும் அதன் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். "மக்கள் தலைவர்' என்ற பதவியுடன் அதிபருக்கும் மேலான பொறுப்பில் இருக்கிறார். அதேபோன்று ரஷிய அரசியலமைப்பிலும் திருத்தங்களை மேற்கொண்டு அதிபருக்கும் அதிபராக புதின் திட்டமிட்டிருக்கலாம்.

  ஏன் அவசரம்?
  புதினின் தற்போதைய பதவிக் காலம் நிறைவடைய இன்னும் 4 ஆண்டுகள் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, இப்போதே தனது எதிர்காலம் பற்றி புதின் கவலைப்படுவானேன்? அதற்கும் காரணம் இருக்கிறது. ரஷியாவில் 2021-இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. நீண்டகால புதின் ஆட்சி மீதான அதிருப்தி, பொருளாதார மந்தநிலை, அரசின் மோசமான சேவைகள் போன்றவற்றால் ஏற்பட்டுள்ள விரக்தி ஆகியவற்றால் புதினின் "ஐக்கிய ரஷியா' கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற பெரும் சிரமத்தைச் சந்திக்க நேரிடும். இச்சூழலில் இத்தகைய அதிகாரப் பரவலாக்கம் திட்டத்துடன், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு இலவச உணவு, ஒரு குழந்தைகளுக்கு மேல் உள்ள பெற்றோருக்கு நிதியுதவி மற்றும் ஏழ்மையை ஒழிக்கும் சில திட்டங்களையும் ஜன. 15-இல் தனது வருடாந்திர உரையில் புதின் அறிவித்தார். இவை தேர்தல் வெற்றிக்கு உதவும் என புதின் எதிர்பார்க்கிறார்.

  புதிய அவதாரம்?
  இவையெல்லாம் புதின் என்னென்ன செய்யக் கூடும் என்கிற அனுமானங்கள்தாம். அதிகாரத்தைத் தக்கவைக்க புதிய அவதாரத்தை புதின் எடுக்கவிருக்கிறார் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. அது என்ன அவதாரம் என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும்.

  மெத்வதேவும் புதினும்
  2008-ஆம் ஆண்டு புதின் அதிபர் பதவியிலிருந்து விலகி பிரதமரானபோது அவருக்குப் பதிலாக அதிபரானவர் திமித்ரி மெத்வதேவ். புதினின் நெருங்கிய கூட்டாளியான மெத்வதேவ், 2012-ஆம் ஆண்டில் புதின் அதிபராக வேண்டும் என நினைத்தபோது உடனடியாக பதவி விலக முன்வந்தார். அத்தேர்தலில் புதின் வெற்றி பெற பிரதமராக மெத்வதேவ் நியமிக்கப்பட்டார். இப்போதும், புதினுக்காகவே பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார் மெத்வதேவ். அவரது அமைச்சரவை பதவி விலகலுக்கு செயல்படாத்தன்மை ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், அதையெல்லாம் மெத்வதேவ் பொருட்படுத்துவதாக இல்லை.

  20 ஆண்டுகளாக பதவியில்...
  1999-ஆம் ஆண்டு பிரதமரான புதின், ஓராண்டு காலம் அப்பதவியில் இருந்தார். அதன்பிறகு 2000-இல் அதிபரானவர் 2008 வரை அதிபராக இருந்தார். 2008 முதல் 2012 வரை பிரதமராக இருந்தவர், 2012 முதல் இப்போதுவரை அதிபராகப் பதவி வகிக்கிறார். புதின் ஆட்சிக்கு எதிராக மாஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் கடந்த ஆண்டு பெரியளவில் மக்கள் போராட்டம் நடந்தது. ஆனாலும், 20 ஆண்டுகளைத் தாண்டி அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள புதினின் அரசியல் செயல்பாடுகள் சிறிதும் குறைவதாக இல்லை.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai