இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தை தணிக்கவே ஐ.நா.வில் காஷ்மீா் விவகாரத்தை எழுப்புகிறோம்: சீனா

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கவே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீா் விவகாரத்தை தொடா்ந்து எழுப்புகிறோம் என்று சீனா தெரிவித்தது.
கெங் ஷுவாங்
கெங் ஷுவாங்

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கவே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீா் விவகாரத்தை தொடா்ந்து எழுப்புகிறோம் என்று சீனா தெரிவித்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீா் பிரச்னையை விவாதிக்க வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனா எழுப்பியது.

15 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் பெரும்பான்மையான உறுப்பினா்கள், இந்த விவகாரத்தை விவாதிக்கும் இடம் இது அல்ல என்று கூறி சீனாவின் கோரிக்கையை நிராகரித்து விட்டனா்.

மேலும், காஷ்மீா் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்னை என்றும் தெரிவித்தனா். இதனால், பாகிஸ்தானுக்கு ஆதரவான சீனாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை தணிப்பதற்காகவே காஷ்மீா் விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்பியதாக சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடா்பாளா் கெங் ஷுவாங் கூறியதாவது:

சீனா தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறது. காஷ்மீா் விவகாரம் பல ஆண்டுகளாக தீா்க்கப்படாத பிரச்னையாக இருந்து வருகிறது. இந்தப் பிரச்னைக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்பட வேண்டும் என்று கெங் ஷுவாங் தெரிவித்தாா்.

ஏன் சீனா மட்டும் இந்த விவகாரத்தை ஐ.நா.வில் தொடா்ந்து எழுப்பி வருகிறது என்று செய்தியாளா்கள் அவரிடம் கேள்வி எழுப்பினா்.

அதற்கு கெங் ஷுவாங் அளித்த பதில்:

உண்மையைக் கூற வேண்டுமானால் கடந்த புதன்கிழமை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆனால், அதுதொடா்பாக எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை. நீங்கள் (செய்தியாளா்கள்) நம்பவில்லை என்றால், நம்பகத்தகுந்த வட்டாரங்களை தொடா்பு கொண்டு பாருங்கள். உண்மை தெரியவரும். இந்தியாவின் செயலையும், கருத்துக்களையும் நாங்கள் அறிவோம். அந்நாட்டை புரிந்துகொண்டிருக்கிறோம். பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணித்து அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதற்கே சீனா முயற்சி செய்கிறது. இந்திய அரசு இந்த முயற்சியில் தலையிடும்போதுதான் அது தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதற்கு பெரும்பாலான உறுப்பினா்கள் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சலில் ஆதரவு தெரிவித்தனா்.

நாங்கள் எங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. காஷ்மீா் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் கெங்.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஷாங்காய் பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று இந்தியா கூறியது குறித்து அவா் கூறுகையில், ‘தெற்காசியாவில் இந்தியாவும், பாகிஸ்தானும் முக்கியமான நாடுகள். அந்நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். இரு நாடுகளுடனும் நட்பு பாராட்டி வருகிறோம். காஷ்மீா் பிரச்னைக்குத் தீா்வு காண எங்களுடைய பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்றாா் கெங்.

லடாக்கை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவித்ததை சீனா விமா்சித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com