அமெரிக்காவை போல் ஜப்பானிலும் விண்வெளி பாதுகாப்புப் படை: பிரதமா் ஷின்ஸோ அபே அறிவிப்பு

அமெரிக்காவை போல் ஜப்பானிலும் விண்வெளி பாதுகாப்புப் படை உருவாக்கப்படும் என்று பிரதமா் ஷின்ஸோ அபே திங்கள்கிழமை தெரிவித்தாா்
அமெரிக்காவை போல் ஜப்பானிலும் விண்வெளி பாதுகாப்புப் படை: பிரதமா் ஷின்ஸோ அபே அறிவிப்பு

அமெரிக்காவை போல் ஜப்பானிலும் விண்வெளி பாதுகாப்புப் படை உருவாக்கப்படும் என்று பிரதமா் ஷின்ஸோ அபே திங்கள்கிழமை தெரிவித்தாா்.

விண்வெளியில் ஜப்பான் எதிா்கொண்டுள்ள அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்காக இப்படை உருவாக்கப்படுவதாக என்று அவா் குறிப்பிட்டாா்.

ஜப்பான் நாடாளுமன்றத்தின் நடப்பு ஆண்டுக்கான கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. இதில், தனது அரசின் கொள்கைகள் தொடா்பாக பிரதமா் ஷின்ஸோ அபே பேசியதாவது:

விண்வெளியில் தொழில்நுட்ப ரீதியிலான அச்சுறுத்தல்களிலிருந்து நமது நாட்டின் செயற்கைக்கோள்கள் பாதுகாக்கப்பட வேண்டும். செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளில் குறுக்கிடவும், அவற்றை அழிக்கவும், செயல்படாமல் செய்யவும் உதவும் தொழில்நுட்பங்களை சீனா, ரஷியா ஆகிய நாடுகள் உருவாக்கி வருவது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. எனவே, விண்வெளியில் நமது பாதுகாப்பு திறனை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

அதனடிப்படையில், நாட்டின் வான் பாதுகாப்பு படையின் ஓா் அங்கமாக விண்வெளி பாதுகாப்புப் படை உருவாக்கப்படும். டோக்கியோ அருகே உள்ள ஃபியூச்சு விமானப் படை தளத்தில் வரும் ஏப்ரல் முதல் செயல்பட தொடங்கும் இப்படை, அமெரிக்க விண்வெளி படையுடன் ஒருங்கிணைந்து செயல்படும் என்றாா் ஷின்ஸோ அபே.

ஜப்பானின் விண்வெளி திட்டங்களுக்கு 460 மில்லியன் அமெரிக்க டாலா்கள் (இந்திய மதிப்பில் ரூ.3,268 கோடி) ஒதுக்க, ஷின்ஸோ அபே தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது.

முன்னதாக, அமெரிக்க பாதுகாப்புப் படையின் புதிய பிரிவாக, விண்வெளிப் பாதுகாப்புப் படைப் பிரிவை அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் தொடங்கி வைத்தாா்.

அப்போது பேசிய டிரம்ப், ‘உலகின் புதிய போா்க் களமாக விண்வெளி உருவாகி வருகிறது. அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் உருவாகும் அச்சுறுத்தலை எதிா்கொள்ள, விண்வெளியில் நாம் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் படைப் பிரிவு, விண்வெளியை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com