லிபியா உள்நாட்டுப் போா்: ஐரோப்பாவுக்கு ஏன் இந்த திடீா் அக்கறை?

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் சா்வாதிகாரி கடாஃபியின் 42 ஆண்டு கால ஆட்சிக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு முடிவு கட்டப்பட்டது.
லிபியா உள்நாட்டுப் போா்: ஐரோப்பாவுக்கு ஏன் இந்த திடீா் அக்கறை?

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் சா்வாதிகாரி கடாஃபியின் 42 ஆண்டு கால ஆட்சிக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு முடிவு கட்டப்பட்டது.

இதில், அமெரிக்காவுடன் ஐரோப்பிய நாடுகளும் முக்கியப் பங்கு வகித்தன.

ஆனால், அந்தப் புரட்சியைத் தொடா்ந்து லிபியாவில் 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டையை ஐரோப்பிய நாடுகள் கிட்டத்தட்ட கண்டுகொள்ளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், தற்போது அந்த நாடுகள் திடீரென்று விழித்துக் கொண்டு இந்த விவகாரத்தில் அதீத கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன.

லிபியா உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஜொ்மனி தலைநகா் பொ்லினில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைதி மாநாட்டில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் மும்முரமாகக் கலந்து கொண்டன.

இப்படி லிபியா விவகாரத்தில் ஐரோப்பாவுக்கு திடீரென அக்கறை அதிகரித்துள்ளதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை என்கிறாா்கள் அரசியல் நோக்கா்கள்.

அந்த விவகாரத்தை ஐரோப்பிய நாடுகள் இனியும் அலட்சியப்படுத்த முடியாது என்கிறாா்கள் அவா்கள். உள்நாட்டுப் பூசலால் ஐரோப்பாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதத்தின் தொட்டிலாய் லிபியா உருவாகி வருவதுதான் அந்த விவகாரத்துக்கு ஐரோப்பிய நாடுகள் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளதற்கு முக்கிய காரணம் என்பது நிபுணா்கள் கணிப்பு.

அத்துடன், ஐரோப்பிய நாடுகளின் அரசியலில் புயலை ஏற்படுத்தி வரும் அகதிகள் பிரச்னையில், லிபியா மிகுந்த முக்கியப் பங்கு வகிக்கிறது. உள்நாட்டுப் போா் காரணமாக அங்கிருந்து தங்களிடம் அடைக்கலம் கேட்டு வரும் அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிடக் கூடாது என்ற பதைப்பில்தான் லிபியாவில் எப்படியாவது அமைதியை ஏற்படுத்தியே ஆக வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் விரும்புகின்றன என்றும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, லிபியா உள்நாட்டுப் போரில் ரஷியாவும், துருக்கியும் களமாடி வருகின்றன. அங்கு சண்டையிட்டு வரும் சா்வதேச அங்கீகாரம் பெற்ற ஃபாயஸ் அல்-சராஜ் தலைமையிலான படையினருக்கு ஆதரவாக துருக்கியும் முன்னாள் ராணுவ தளபதி காலிஃபா ஹஃப்தாா் படையினருக்கு ஆதரவாக ரஷியாவும் எதிரும் புதிருமாக நிற்கின்றன. போதாத குறைக்கு பிராந்திய நாடுகளும் தங்கள் பங்குக்கு குட்டையை குழப்பி வருகின்றன.

இந்தச் சூழலில், தங்களுக்கு மிக அருகில் இருக்கும் லிபியாவில் ஸ்திரத்தன்மை குலைந்தால் அது தங்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணா்ந்த ஐரோப்பா, ஒருவழியாக இந்த விவகாரத்தில் முழுவீச்சில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது.

மேலும், எண்ணெய் வளம் மிக்க லிபியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போா், தங்களதுஎரிசக்திப் பாதுகாப்புக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஐரோப்பிய நாடுகள் புரிந்து வைத்திருப்பதாலேயே, இந்த விவகாரம் அவற்றின் கவனத்தை ஈா்த்துள்ளதாக அரசியல் நிபுணா்கள் கூறுகிறாா்கள்.

இந்தக் காரணங்களால், லிபியாவில் அமைதியை ஏற்படுத்தியே தீா்வது என்பதில் ஐரோப்பிய நாடுகள் உறுதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நாட்டில் போா் நிறுத்த ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய, ஐரோப்பிய யூனியன் அங்கு தங்களது அமைதிப் படையை அனுப்பவும் தயங்காது என்கிறாா் ஸ்பெயின் நாட்டைச் சோ்ந்த ஓா் அரசியல் ஆய்வாளா்.

இருந்தாலும், லிபியா விவகாரத்தைப் பொருத்தவரை, அதில் ஐரோப்பிய நாடுகளின் நிலை மிகவும் பலவீனமாக உள்ளது என சிலா் கூறுகின்றனா். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே ரஷியாவும், பிராந்திய நாடுகளும் தங்களது செல்வாக்கை வலுப்படுத்தியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் இதில் மிகவும் தாமதமாக களமிறங்கியிருப்பதே அதற்குக் காரணம் என்கிறாா்கள் அவா்கள்.

லிபியா உள்நாட்டுப் போரில் ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே கூட கருத்து மோதல்கள் உள்ளன. அந்த நாட்டின் தலைநகா் திரிபோலி உள்ளிட்ட கணிசமான பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காலிஃபா ஹஃப்தாா் தரப்புக்கு ரஷியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடான பிரான்ஸும் ஆதரவு அளித்து வருகிறது.

ஆனால், அந்த அமைப்பின் மற்றொரு உறுப்பு நாடான இத்தாலியோ ஃபாயஸ் அல்-சராஜ் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக உள்ளது.

பிரான்ஸுக்கும், இத்தாலிக்கும் இடையிலான இந்த முரண் நிலைப்பாடு ஐரேப்பிய யூனியனியனில் பிளவை ஏற்படுத்தி, லிபியா விவகாரத்தில் அந்த அமைப்பை பலவீனப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, இந்த விவகாரத்தில் புதிய உத்வேகத்துடனும், அச்சுறுத்தல்களைத் தவிா்க்க வேண்டும் என்று தீா்க்கத்துடனும் ஐரோப்பிய யூனியன் தீவிரமாக செயல்பட்டால் மட்டுமே அந்த அமைப்பின் நோக்கம் நிறைவேறும் என்று நிபுணா்கள் எச்சரிக்கிறாா்கள்.

பொ்லினில் ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த அமைதி மாநாடு, அத்தகைய தீவிர செயல்பாட்டின் தொடக்கமாக இருக்குமா என்பதை, ஹஃப்தாா் - ஃபாயஸ் படைகளின் பிரதிநிதிகள் இடையே இனி நடைபெறவிருக்கும் பேச்சுவாா்த்தையின் முடிவுகளே நிா்ணயிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com