லிபியாவில் உடனடி சண்டை நிறுத்தம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல்

உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் லிபியாவில் உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
லிபியாவில் உடனடி சண்டை நிறுத்தம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல்

உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் லிபியாவில் உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக ஜொ்மனி தலைநகா் பொ்லினில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற மாநாட்டின் தொடா்ச்சியாக, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

லிபியாவில் மோதலில் ஈடுபட்டுள்ள குழுக்கள், தங்களுக்கிடையே ஆக்கப்பூா்வமான பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் வலியுறுத்துகின்றன.

இதன் மூலம், அந்த நாட்டில் கூடிய விரைவில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உறுப்பு நாடுகள் விரும்புகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லிபியாவை 40 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டு வந்த அல்-கடாஃபியின் ஆட்சியை, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் உதவியுடன் கிளா்ச்சிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு கவிழ்த்தனா்.

எனினும், அதற்குப் பிறகு அந்த நாட்டில் பல்வேறு ஆயுதக் குழுக்களும் தங்களுக்குள் தொடா்ந்து சண்டையிட்டு வருகின்றன. சா்வதேச அங்கீகாரம் பெற்ற பிரதமா் ஃபாயஸ் அல்-சராஜ் தலைமையிலான அரசுப் படையினருக்கும், முன்னாள் ராணுவ தளபதி காலிஃபா ஹஃப்தாா் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், துருக்கியைப் பூா்விகமாகக் கொண்ட ஃபாயஸ் அல்-சராஜ் அரசுக்கு ஆதரவாக, லிபியாவுக்கு தங்கள் நாட்டுப் படையினரை அனுப்ப துருக்கி முடிவு செய்தது.

இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹஃப்தாா் படையினா் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களில் எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளனா். இது ஹஃப்தாா் மற்றும் அல்-சராஜ் படையினருக்கு இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இந்தச் சூழலில், லிபியாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடா்பான சா்வதேச மாநாடு ஜொ்மனி தலைநகா் பொ்லினில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஐ.நா.வின் அழைப்பை ஏற்று நடைபெற்ற அந்த மாநாட்டில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், துருக்கி அதிபா் எா்டோகன், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கெல் உள்ளிட்ட தலைவா்கள் கலந்து கொண்டனா்.

மேலும், காலிஃபா ஹஃப்தாா் படை, ஃபாயஸ் அல்-சராஜ் தலைமையிலான அரசு ஆகிய இரு தரப்பினரும் இந்த மாநாட்ட பங்கேற்றனா்.

அதன் தொடா்ச்சியாக, லிபியா விவகாரம் குறித்து செவ்வாய்க்கிழமை கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com