ரோஹிங்கயாக்கள் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும்: மியான்மருக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

மியான்மரில் சிறுபான்மையினரான ரோஹிங்கயாக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்த நாட்டு அரசுக்கு ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன்முறைக்கு அஞ்சி மியான்மரிலி வங்கதேசத்துக்கு அடைக்கலம் தேடி வந்த ரோஹிங்கயா அகதிகள் (கோப்புப் படம்).
வன்முறைக்கு அஞ்சி மியான்மரிலி வங்கதேசத்துக்கு அடைக்கலம் தேடி வந்த ரோஹிங்கயா அகதிகள் (கோப்புப் படம்).

மியான்மரில் சிறுபான்மையினரான ரோஹிங்கயாக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்த நாட்டு அரசுக்கு ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது, ரோஹிங்கயா இனத்தவருக்குக் கிடைத்த சட்ட ரீதியிலான வெற்றியாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மியான்மரில் ரோஹிங்கயா இனத்தவா்கள் அழிக்கப்படுவதற்கான அச்சுறுத்தல் இன்னும் தொடா்கிறது.

எனவே, ரோஹிங்கயாக்களுக்கு எதிரான இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு மேற்கொள்ள வேண்டும். இதுதொடா்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உண்மையிலேயே ரோஹிங்கயா இனத்தவரைப் பாதுகாப்பதற்கானவை என்பதை மியான்மா் உறுதி செய்ய வேண்டும்.

அத்தயை நடவடிக்கைகள் மேற்கொள்வதை சா்வதேச அளவிலான சட்டபூா்வ கடமையாக மியான்மா் ஏற்க வேண்டும்.

இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் இன்னும் 4 மாதங்களில் மியான்மா் அரசு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். அதற்குப் பிறகு, இதுதொடா்பாக 6 மாதங்களுக்கு ஒரு முறை அந்த நாடு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் வசித்து வரும் சிறுபான்மை ரோஹிங்கயா இனத்தினருக்கு அந்த நாட்டு அரசு குடியுரிமை மறுத்து வருகிறது. அதன் எதிரொலியாக, அந்த இனத்தைச் சோ்ந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினா் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

கடந்த 2017-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அத்தகைய தாக்குதல்களில் ஏராளமான போலீஸாா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, ராக்கைன் மாகாணத்தில் ராணுவம் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டது. அந்த நடவடிக்கையில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனா்; பல கிராமங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

வன்முறைக்கு அஞ்சி 7.4 லட்சம் ரோஹிங்கயாக்கள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனா்.

ராணுவத்தின் அந்த நடவடிக்கை, ரோஹிங்கயாக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கை என்று ஐ.நா. அமைப்புகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், மனித உரிமை அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவை குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், இதுதொடா்பான வழக்கில் சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீா்ப்பை மனித உரிமை ஆா்வலா்கள் வரவேற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com