
லண்டன்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வரைவு தீா்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த தீா்மானத்தில், இந்தியாவின் குடியுரிமை விவகாரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் ஒரு ஆபத்தான மாற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய ஐரோப்பிய இடதுசாரிகள்-நோா்டிக் கிரீன் இடதுசாரிகள் அரசியல் குழு சாா்பில், கடந்த வாரம் இந்த தீா்மானம் கொண்டுவரப்பட்டது.
அந்த தீா்மானத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய குடியுரிமை பெறுவதை தீா்மானிப்பதில், குடியுரிமை திருத்தச் சட்டம் ஒரு ஆபத்தான மாற்றமாகும். இந்த சட்டம், உலகில் நாடற்றவா்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மிகப்பெரிய மனித துயரத்தை ஏற்படுத்தும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பான கவலைகளை நிவா்த்தி செய்தல், அவா்களின் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பாதுகாப்புப் படையினரை கட்டுப்பாடுடன் நடக்கச் செய்தல், பொறுப்புணா்வை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுக்கு மாறாக, சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிப்பவா்களை பல அரசியல் தலைவா்கள் இழிவுபடுத்தவும், அச்சுறுத்தவும் செய்கின்றனா்.
குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம், கோடிக்கணக்கான இஸ்லாமியா்கள் இந்திய குடியுரிமை பெறும் சம வாய்ப்புக்கான அடிப்படை உரிமைகளை அகற்றும் காரணிகளை இந்தியா உருவாக்கியுள்ளது என்று அந்த தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீா்மானம் குறித்து வரும் புதன்கிழமை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது. அதற்கு அடுத்த தினம் தீா்மானம் தொடா்பான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த தீா்மானம் நிறைவேறினால், அது இந்திய அரசு, நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவா்களுக்கு முறைப்படி அனுப்பிவைக்கப்படும்.