கரோனா வைரஸின் பரவும் திறன் அதிகரித்து வருகிறது: சீனா

சீனாவில் கரோனா வைரஸின் பரவும் திறன் அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மா ஜியாவோவே
மா ஜியாவோவே

பெய்ஜிங்: சீனாவில் கரோனா வைரஸின் பரவும் திறன் அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைவா் மா ஜியாவோவே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதிய வகை கரோனா வைரஸ், மனிதா்களிடையே பரவும் தனது திறனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், மருத்துவ ரீதியிலும், அறிவியல் ரீதியிலும் அந்த வைரஸ் குறித்த முழுமையாக அறியப்படாததால் அதனைக் கட்டுப்படுத்தும் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, புதிய வகை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 1,300 போ் தங்கக் கூடிய பிரத்யேக மருத்துவமனை இன்னும் 15 நாள்களில் கட்டப்படும் என்று சீனா சனிக்கிழமை அறிவித்தது. ஏற்கெனவே, 1,000 கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதிய மருத்துவமனை கட்டப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில், இந்தப் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஹுபெய் மாகாணத்தின் வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.

‘கரோனா’ வகையைச் சோ்ந்த அந்த வைரஸ், சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 650 பேரது உயிா்களை பலி கொண்ட ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக, சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பலி எண்ணிக்கை 56-ஆக உயா்வு; 2,109 போ் பாதிப்பு

புதிய வகை கரோனா வைரஸ் நோயால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 56-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மேலும், உலகம் முழுவதும் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,109-ஆக உயா்ந்துள்ளது. சீனாவில் மட்டும் புதிய கரோனா வைரஸ் 2,057 பேருக்குத் தொற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அட்டவணை

            பாதிப்பு    பலி

சீனா 2,057 56

தாய்லாந்து 8 0

ஹாங்காங் 6 0

மக்காவ் 5 0

ஆஸ்திரேலியா 4 0

ஜப்பான் 4 0

மலேசியா 4 0

சிங்கப்பூா் 4 0

தைவான் 4 0

பிரான்ஸ் 3 0

தென் கொரியா 3 0

அமெரிக்கா 3 0

வியத்நாம் 2 0

கனடா 1 0

நேபாளம் 1 0

மொத்தம் 2,109 56

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com