கரோனா வைரஸை எதிர்த்து வெற்றி காணும் திறன் சீனாவிடம் உள்ளது: அதிபர் ஷி ஜின்பிங்

கரோனா வைரஸை எதிர்த்து வெற்றி காணும் திறனும், நம்பிக்கையும் சீனாவிடம் உள்ளது என அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கரோனா வைரஸை எதிர்த்து வெற்றி காணும் திறனும், நம்பிக்கையும் சீனாவிடம் உள்ளது என அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் நோயால் சீனா பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கேப்ரியசஸ் ஆகியோர் நேற்று (செவ்வாய்கிழமை) பெய்ஜிங்கில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங்,  

"கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்து வெற்றி காணும் திறனும், நம்பிக்கையும் சீனாவிடம் உள்ளது. சீன மக்கள் மிக முக்கியமான போரைச் சந்தித்து வருகின்றனர். மக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தைக் காட்டிலும் சீன அரசுக்கு எதுவும் முக்கியமானதல்ல. எனவே, இதை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வோம்.

இந்த நோய் குறித்த தகவலை பகிர்ந்து உலக சுகாதார அமைப்புடன் நேர்மறையான ஒத்துழைப்பைத் தொடர்வதை சீனா எதிர்நோக்கி உள்ளது" என்றார்.

இதையடுத்து, கரோனா வைரஸ் நோயை எதிர்கொள்வதில் சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மற்றும் நோய் குறித்த தகவலை அந்நாடு சர்வதேச அளவில் பகிர்வது குறித்தும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கேப்ரியசஸ் பாராட்டிப் பேசினார். அவர் மேலும் பேசியதாவது,

"சீனாவின் அரசியல் அர்ப்பணிப்பும், தீவிரமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் இந்த நோய் பரவுவதைத் தடுக்க உதவும். ஷி ஜின்பிங்கின் வலிமையான தலைமையை உலக சுகாதார அமைப்பு பாராட்டுகிறது. நோய்க்கு எதிரான போரில் சீனா வெற்றி பெறும். சீன அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார அமைப்பு உறுதியான ஆதரவை அளிக்கிறது. மேலும், சீனாவுடனான தொடர்பையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தவும் உலக சுகாதார அமைப்பு விரும்புகிறது" என்றார்.

இதைத் தொடர்ந்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பின்போது பேசிய டெட்ரோஸ், சீனாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உலக சுகாதார அமைப்பு தயாராக உள்ளது என்றார். 

மேலும், மற்ற நாடுகள் சீனாவில் உள்ள தங்கள் நாட்டினரை திரும்ப அழைப்பது குறித்து பேசிய டெட்ரோஸ், "தற்போதைய நிலையில், உலக நாடுகள் அமைதி காக்க வேண்டும். அநாவசியமாக எதிர்வினை ஆற்றுவதைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com