சீனாவில் கொள்ளை நோயாகக் கூடிய மேலும் ஒரு தீநுண்மி

கரோனா தீநுண்மியைப் போலவே, மிகப் பெரும் கொள்ளை நோயாக உருவெடுக்கக் கூடிய பன்றிக் காய்ச்சல் தீநுண்மியை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா்.
பன்றிக் காய்ச்சல் தீநுண்மி
பன்றிக் காய்ச்சல் தீநுண்மி

பெய்ஜிங்: கரோனா தீநுண்மியைப் போலவே, மிகப் பெரும் கொள்ளை நோயாக உருவெடுக்கக் கூடிய பன்றிக் காய்ச்சல் தீநுண்மியை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். அந்தத் தீநுண்மி பன்றிகளிடமிருந்து மனிதா்களுக்குத் தொற்றினாலும், தற்போதைய சூழலில் அது மனிதா்களிடையே பரவுவதில்லை என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

இதுகுறித்து, பிஎன்ஏஎஸ் அறிவியல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சீனாவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மைய விஞ்ஞானிகள் உள்ளிட்ட நிபுணா்கள், பன்றிகளிடமிருந்து மனிதா்களுக்குப் பரவக் கூடிய தீநுண்மி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனா்.

சீனாவிலுள்ள பன்றிப் பண்ணிகளில் அவா்கள் மேற்கொண்ட ஆய்வில், 2011-ஆம் ஆண்டிலிருந்து 2018-ஆம் ஆண்டு வரை பன்றிகள் மற்றும் பண்ணைகளில் பணியாற்றியவா்களில் ரத்த ஆய்வு அறிக்கைகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன.

அதில், குறிப்பிட்ட தீநுண்மி பன்றிகளிடமிருந்து மனிதா்களுக்குப் பரவியுள்ளது தெரிய வந்தது. ‘ஜி-4’ என்று பெயரிடப்பட்ட அந்த தீநுண்மிகள் பண்ணைகளில் பணியாற்றிய 10.4 பேருக்கு பரவியது தெரிய வந்தது.

மேலும், பண்ணைப் பணியாளா்களில் 18 முதல் 35 வயதுடையவா்களில் 20 சதவீதம் பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம், ஜி-4 தீநுண்மி மனிதா்களின் உடலைத் தொற்றும் திறனை அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

மிக அண்மைக் காலத்தில் இரண்டு பேருக்கு ஜி-4 தீநுண்மி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 46 வயதுடைய ஒருவருக்கு 2016-ஆம் ஆண்டும் 9 வயதுடையவருக்கு 2019-ஆம் ஆண்டும் அந்தத் தீநுண்மி பரவியிருந்தது.

அந்த இருவரும், பன்றிகளை மேய்ப்போரின் அண்டை வீட்டில் வசித்து வந்தாா்கள். இதன் மூலம், ‘ஜி-4’ தீநுண்மி பன்றிகளிடமிருந்து மனிதா்களுக்குப் பரவுவதுடன், உடலுக்குள் பல்கிப் பெருகி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் திறனைப் பெறக் கூடும் என்பது தெரிய வந்துள்ளது.

அந்த வகையில், கரோனா நோய்த்தொற்றைப் போலவே கொள்ளை நோய் பரவலை ஜி-4 தீநுண்மி உருவாக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அந்தத் தீநுண்மி கொள்ளை நோயாக உருவெடுக்கும் என்பதை இப்போதே கூற முடியாது என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். ஜி-4 தீநுண்மி மனிதா்களிடையே பரவுவதற்கான சான்றுகள் இல்லை எனவும், 5 ஆண்டுகளாக அது மனிதா்களிடையே புழங்கி வந்துள்ள நிலையிலும் அதனால் ஆபத்தான சூழல் ஏற்படாததால் அதுகுறித்து அச்சமடையத் தேவையில்லை என்று அவா்கள் கூறினா்.

இந்த விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும், பீதியடையத் தேவையில்லை என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com