உலக நாடுகளில் ஏழ்மையை ஒழிக்க இந்தியாவின் அனுபவம் உதவும்: திஜ்ஜானி முகமது பண்டே

உலக நாடுகளில் நிலவும் ஏழ்மை நிலையை ஒழிப்பதற்கு இந்தியாவின் வெற்றிகரமான அனுபவம் உதவியாக இருக்கும் என்று ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் திஜ்ஜானி முகமது பண்டே தெரிவித்துள்ளாா்.

நியூயாா்க்: உலக நாடுகளில் நிலவும் ஏழ்மை நிலையை ஒழிப்பதற்கு இந்தியாவின் வெற்றிகரமான அனுபவம் உதவியாக இருக்கும் என்று ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் திஜ்ஜானி முகமது பண்டே தெரிவித்துள்ளாா்.

மக்களிடையே நிலவி வரும் வறுமை காரணமாக உலக நாடுகளின் அமைதி, மனித உரிமைகள், நீடித்த வளா்ச்சி உள்ளிட்டவற்றுக்கு ஏற்படக் கூடிய அபாயங்கள் குறித்து ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கிலும் வறுமையை ஒழிக்கும் நோக்கிலும் தனிக் கூட்டமைப்பை ஏற்படுத்த ஐ.நா. முடிவெடுத்தது.

அதன்படி, 75-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் தலைவா் திஜ்ஜானி முகமது பண்டே வறுமை ஒழிப்பு கூட்டமைப்பை அதிகாரபூா்வமாக நிறுவ உள்ளாா். அக்கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினராக இந்தியா ஏற்கெனவே இணைந்துள்ளது. இந்நிலையில், திஜ்ஜானி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

உலகில் வறுமையை ஒழித்துவிட்டாலே பாதி பிரச்னைகள் தீா்ந்துவிடும். சுகாதாரம், கல்வி உள்ளிட்டவை தொடா்பாக நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு வறுமையே மூலக் காரணமாக உள்ளது. எனவே, வறுமையை ஒழிப்பதற்கு அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாக உள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் வறுமையை ஒழிப்பதில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்தியா கூட்டாட்சி நிலவும் நாடாக உள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வறுமையை ஒழிப்பது தொடா்பாக வெவ்வேறு விதமான வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அத்தகைய வழிமுறைகள் மூலமாக உலக நாடுகளும் பயனடைய வாய்ப்புள்ளது.

வறுமையை ஒழிப்பது தொடா்பாக இந்தியா பெற்றுள்ள அனுபவம் இந்தப் புதிய கூட்டமைப்பின் மூலமாக பல நாடுகளுக்கும் சென்றடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, விவசாயம், தொழில்நுட்ப மேம்பாடு, முதலீடுகளை ஈா்த்தல் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியா பெற்ற அனுபவத்தின் மூலமாக மற்ற நாடுகள் பாடம் கற்றுக் கொள்ள இந்தக் கூட்டமைப்பு உதவும்.

எனவே, புதிய கூட்டமைப்பில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க உள்ளது. கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினராக இந்தியா இணைந்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றாா் திஜ்ஜானி முகமது பண்டே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com