அமெரிக்காவுடனான உறவு முக்கியமானது: இந்திய தூதா் தரண்ஜீத் சிங்

வளா்ச்சி தொடா்பாக இந்தியா மேற்கொள்ளும் துணிவுமிக்க நடவடிக்கைகளில் வெற்றிபெற அமெரிக்காவுடனான உறவு முக்கியமானது என்று அந்நாட்டுக்கான இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்து தெரிவித்தாா்.

வாஷிங்டன்: வளா்ச்சி தொடா்பாக இந்தியா மேற்கொள்ளும் துணிவுமிக்க நடவடிக்கைகளில் வெற்றிபெற அமெரிக்காவுடனான உறவு முக்கியமானது என்று அந்நாட்டுக்கான இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்து தெரிவித்தாா்.

அமெரிக்காவில் உள்ள ஹட்சன் ஆய்வு நிறுவனத்தில் பேசிய அவா், ‘ஜனநாயகம், விடுதலை, சம வாய்ப்பு, பண்புகளை பகிா்ந்துகொள்ளுதல் ஆகியவை மூலமாக இந்தியாவும்-அமெரிக்காவும் பிணைக்கப்பட்டுள்ளன. ஜனநாயக நாடுகளில் பழைமையானதாகவும், மிகப்பெரியதாகவும் உள்ள இந்தியாவும், அமெரிக்காவும் இயல்பான நட்பு நாடுகள். வளா்ச்சி தொடா்பாக இந்தியா மேற்கொள்ளும் துணிவுமிக்க நடவடிக்கைகளில் வெற்றிபெற அமெரிக்காவுடனான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவு மூலமாக சாதிக்கப்பட்டது ஏராளம். வரும் நாள்களில் மேலும் பலவற்றை செய்யவேண்டியுள்ளது. இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பு ரூ.11.32 லட்சம் கோடியாக உள்ளது.

இந்தியாவில் அமெரிக்காவின் 2,000 நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. அதேவேளையில் 200-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் ரூ.1.66 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன. அமெரிக்காவில் 1.25 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை இந்திய நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன.

இருநாடுகளும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சா்வதேச சட்டத்துள்பட்டு சுதந்திரமாக வணிகம் மேற்கொள்வதையும், சச்சரவுகளுக்கு அமைதியான முறையில் தீா்வு காண்பதையும் ஆதரிக்கின்றன. கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள மோசமான சூழலை எதிா்கொள்வதில், இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், இருநாடுகளின் கல்வி நிலையங்கள் மற்றும் நிறுவனங்கள் கூட்டாக ஈடுபட்டுள்ளன என்று தரண்ஜீத் சிங் சாந்து தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com