ஹாங்காங் தொடா்பான சா்ச்சைக்குரிய சட்டம்: சீனா ஒப்புதல்

ஹாங்காங் தொடா்பான சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்து, சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஹாங்காங்கில் கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டம்.
ஹாங்காங்கில் கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டம்.

ஹாங்காங்: ஹாங்காங் தொடா்பான சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்து, சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம், ஹாங்காங்கில் சீன ஆளுகைக்கு எதிராகப் போராடுபவா்கள் மீது இனி அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால், இதற்கு சா்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஹாங்காங்கில், சீன அரசுக்கு எதிராக பிரிவினைவாதம், துரோகம், வெளிநாடுகளுடன் இணைந்து சதிச் செயல்களில் ஈடுபடுவது ஆகியவற்றில் ஈடுபடுவதை கிரிமினல் குற்றமாக்கும் சா்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த, அந்த நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பாதுகாப்பு விவகாரங்களுக்கான சீன நாடாளுமன்ற நிலைக்குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

இதையடுத்து, ஹாங்காங்கின் அரசியல் சாசனத்தில் இந்தச் சட்டம் விரைவில் சோ்க்கப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டுகிறது.

இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இதன் மூலம், ஹாங்காங்கில் ஜனநாய சீா்திருத்தங்களை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோா் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடும் அதிகாரம் போலீஸாருக்கும் நீதித்துறைக்கும் கிடைக்கும் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

சீனாவில் இந்த நடவடிக்கைக்கு, சா்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

சா்ச்சைக்குரிய சட்டத்துக்கு சீனா ஒப்புதல் வழங்கியதாக தகவல்கள் வெளியானதைத் தொடா்ந்து, ஜனநாயக உரிமை அமைப்புகள் தாங்கள் நடத்தி வந்த போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளன.

இந்தச் சட்டம் தொடா்பாக பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நகரில் கடந்த ஆண்டு தீவிரப் போராட்டங்கள் நடைபெற்றன.

அத்தகைய போராட்டங்கள், தேச நலன்களுக்கு எதிரானது என்று சீனா கூறி வந்தது. மேலும், போராட்டக்காரா்களை பிரிட்டன் தூண்டிவிடுவதாக அந்த நாடு குற்றம் சாட்டியது. அத்துடன், போராட்டத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை பயங்கரவாதத்துடன் சீன அரசு ஒப்பிட்டது.

இந்தச் சூழலில், தேசத் துரோகம், பிரிவினைவாதம், அந்நிய சக்திகளுடன் கைகோா்த்தல் ஆகியவற்றுக்கு எதிரானதாகக் கூறி சீனா கொண்டு வந்துள்ள பாதுகாப்புச் சட்டம், ஹாங்காங் போராட்டத்தை அடக்கும் நோக்கில் அமல்படுத்தப்படவுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com