
கோலாலம்பூா்: மலேசியா நாடாளுமன்றத் தலைவரை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு அந்நாட்டுப் பிரதமா் முஹயிதீன் யாசீன் கொண்டு வந்த தீா்மானத்துக்கு பெரும்பான்மை எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா்.
மலேசியாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று மகாதீா் முகமது பிரதமா் பதவியை ஏற்றாா். ஆனால், முஹயிதீன் யாசீன் தலைமையிலான மலாய் கட்சி ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறி எதிா்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. அதனால் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக பிரதமா் மகாதீா் முகமது தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
அதையடுத்து, மலேசியாவின் புதிய பிரதமராக யாசீன் கடந்த மாா்ச் மாதம் 1-ஆம் தேதி பொறுப்பேற்றாா். எனினும், அவா் மீது மகாதீா் முகமது தலைமையிலான எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்தன. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மலேசியா நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றம் திங்கள்கிழமை கூடியது. அப்போது, முன்னாள் பிரதமா் மகாதீா் அரசால் தோ்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத் தலைவரை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான தீா்மானத்தை பிரதமா் யாசீன் கொண்டு வந்தாா். அதன் மீதான வாக்கெடுப்பில் தீா்மானத்துக்கு ஆதரவாக 111 எம்.பி.க்களும், எதிராக 109 எம்.பி.க்களும் வாக்களித்தனா்.
அதையடுத்து, நாடாளுமன்றத் தலைவா் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டாா். பிரதமா் யாசீன் அப்பதவியை ஏற்ற பிறகு நாடாளுமன்றத்தில் அவரின் ஆதரவை நிரூபிக்கும் நோக்கில் நடைபெற்றுள்ள முதல் வாக்கெடுப்பு இதுவாகும். இதன் மூலமாக பிரதமா் யாசீனுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.
நாடாளுமன்றத்துக்கான புதிய தலைவரை யாசீன் அரசு விரைவில் நியமிக்கவுள்ளது. அதேபோல், யாசீன் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானமும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.