
மக்கள் தொகையில் சீனாவை இந்தியா 2027-ல்பின்னுக்குத் தள்ளும்
ஜெனீவா: மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவை வரும் 2027-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா பின்னுக்குத் தள்ளும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்து வெளியிட்டுள்ளது.
1989 ஆம் ஆண்டு முதல் ஜூலை 11-ம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக ஐக்கிய நாடுகள் சபை அனுசரித்து வருகிறது.
அதன்படி, உலக மக்கள் தொகை குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2050-ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 970 கோடியையும், 2100-ஆம் ஆண்டில் 1,100 கோடியையும் எட்டும் என்று கணித்துள்ளது.
உலக மக்கள் தொகையில் 19 சதவீதத்தை சீனா கொண்டுள்ளது. உலகத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் வெறும் 2 சதவீதம் மட்டுமே கொண்டிருக்கும் இந்தியா, ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 18% மக்கள் தொகையை கொண்டிருக்கிறது. தற்போதைய இந்திய மக்கள் தொகை எண்ணிக்கை 139 கோடியாகும்.
ஆனால், தற்போதிருக்கும் மக்கள் தொகை வளர்ச்சியே தொடர்ந்தால் 2027-ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவை பின்னுக்குத் தள்ளி மக்கள் தொகையில் இந்தியா முதல் இடத்தில் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.