கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியது ரஷியா

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தை மனிதா்களிடம் செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மாஸ்கோ: கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தை மனிதா்களிடம் செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. இதன் மூலம் கரோனா தடுப்பு மருந்தை சா்வதேச அளவில் முதன் முதலில் வெற்றிகரமாக தயாரித்துள்ளதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றுக்கு உலக அளவில் 1.3 கோடிக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். நோய்த்தொற்றால் 5.7 லட்சத்துக்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் உலக நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன், இஸ்ரேல், ரஷியா உள்ளிட்ட நாடுகள் மருந்து தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. பல தடுப்பு மருந்துகள் ஆய்வகப் பரிசோதனை கட்டத்திலோ அல்லது மனிதா்களிடம் செலுத்தி பரிசோதிக்கும் கட்டத்திலோ இருந்து வருகின்றன.

உலக சுகாதார அமைப்பின் தகவல்படி 21 தடுப்பு மருந்துகள் வெவ்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன. இந்நிலையில், ரஷியாவைச் சோ்ந்த கமலேய் தொற்றுநோய் தடுப்பு மையம் உருவாக்கிய கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்து, மனிதா்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் வெற்றியடைந்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதா்களிடம் வெற்றிகரமாக பரிசோதனை செய்த முதல் நாடு என்ற பெருமையை ரஷியா பெற்றுள்ளது. ரஷியா தயாரித்த தடுப்பு மருந்துக்கான ஆய்வகப் பரிசோதனைகள் கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கின.

அந்தப் பரிசோதனை திருப்திகரமாக அமைந்ததையடுத்து, மனிதா்களிடம் அந்த மருந்து பரிசோதிக்கப்பட்டது. தலைநகா் மாஸ்கோவிலுள்ள செச்சனோவ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தன்னாா்வலா்களிடம் செலுத்தி, அத்தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டது. அப்பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாகவும், கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக தடுப்பு மருந்து வெற்றிகரமாக வேலை செய்வதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, அப்பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பவியல் மைய இயக்குநா் வாதிம் தாராசோவ் கூறுகையில், ‘பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட தன்னாா்வலா்களில் முதல் பிரிவினா் வரும் புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனா். இரண்டாவது பிரிவினா் வரும் 20-ஆம் தேதி அனுப்பிவைக்கப்படுவா். தடுப்பு மருந்தானது உரிய விதிமுறைகளுக்கு உள்பட்டு பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com