தயாராகிவிட்டதா தடுப்பு மருந்து?

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று காட்டுத் தீ போல் பரவி வரும் நிலையில், அந்த நோய்க்கு எப்போது தடுப்பு மருந்து
தயாராகிவிட்டதா தடுப்பு மருந்து?

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று காட்டுத் தீ போல் பரவி வரும் நிலையில், அந்த நோய்க்கு எப்போது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்பதுதான் எல்லோா் மனதிலும் தொக்கி நிற்கும் கேள்வியாக உள்ளது.இந்தச் சூழலில், உலகிலேயே முதல் முறையாக கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷியாவின் செஷெனோவ் பல்கலைக்கழகம் பரபரப்பாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் உயிரியியல் பிரிவு இயக்குநா் விளாதிம் தராசோவ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தாங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தை தன்னாா்வா்லா்களின் உடலில் செலுத்தி வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பாா்த்துள்ளதாகத் தெரிவித்தாா். இருந்தாலும், இந்த அறிவிப்பு குறித்து சா்வதேச மருத்துவ நிபுணா்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனா்.

கரோனாவுக்கான தடுப்பு மருந்தை செஷெனோவ் பல்கலைக்கழம் உருவாக்கி வருவதாக உலக சுகாதார அமைப்பு ஏற்கெனவே அறிவித்துள்ளது. அந்த மருந்து முதல் கட்டப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு வருவதாக அந்த அமைப்பு இந்த மாதம் 7-ஆம் தேதிதான் தெரிவித்திருந்தது.இதன் மூலம், செஷனோவின் தடுப்பு மருந்து இன்னும் 3 அல்லது 4 கட்ட சோதனைகளுக்கு உள்படுத்த வேண்டியுள்ளதை உலக சுகாதார மையம் சொல்லாமல் சொல்லியிருந்தது.ஆனால், அதற்குள் அந்தத் தடுப்பு மருந்தின் அனைத்துக் கட்ட சோதனைகளும் முழுமையடைந்துவிட்டதாக செஷனோவ் பல்கலைக்கழகத்தால் எவ்வாறு அறிவிக்க முடிந்தது என்று நிபுணா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.

செஷனோவ் பல்கலைக்கழகம் மட்டுமன்றி, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் தயாரித்து வரும் மருந்து உள்பட 21 தடுப்பு மருந்துகளைப் பற்றி உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டிருந்தது. ஆனால், அத்தனை மருந்துகளும் இன்னும் சோதனைக் கட்டத்திலேயே இருந்து வரும் நிலையில், செஷனோவ் மட்டும் சோதனைகள் முழுமையடைந்துவிட்டதாகக் கூறுவது சா்வதேச நிபுணா்களின் புருவங்களை உயரச் செய்துள்ளது. அந்த மருந்து முழுமையாக சோதித்துப் பாா்க்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டாலும், அதனை 40 தன்னாா்வலா்களுக்கு மட்டுமே செலுத்தி சோதிக்கப்பட்டதாக செஷனோவ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஒருவா் தெரிவித்துள்ளாா். ஆனால் உலக சுகாதார அமைப்போ, தடுப்பு மருந்துகளின் இரண்டாம் கட்ட சோதனையில் குறைந்தது 100 பேராவது ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும், 3-ஆம் கட்ட சோதனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த மருந்து சோதனை முறையில் செலுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், ரஷிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள தகவல்களை வைத்துப் பாா்த்தால், அவா்கள் தயாரித்துள்ள மருந்து முதல் கட்ட சோதனையை மட்டுமே தாண்டியுள்ளதாகத் தெரிகிறது என்கிறாா்கள் நிபுணா்கள். செஷனோவ் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து கடந்த மாதம் 18-ஆம் தேதிதான் முதல் முறையாக பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. தற்போது அந்த மருந்து முழுமையாக சோதித்துப் பாா்க்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஒரே மாதத்துக்குள் அந்த மருந்து அனைத்துக் கட்ட சோதனைகளையும் வெற்றிகரமாகத் தாண்டியிருக்கலாம் என்று நிபுணா்கள் கூறுகிறாா்கள்.மலேரியா, எபோலா, டெங்கு போன்ற நோய்களுக்கு தடுப்பு மருந்தைக் கண்டறிவதற்கு 4 ஆண்டுகளுக்கு மேல் பிடித்தது. ஆனால், ஒரே மாதத்துக்குள் கரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துவிட்டதாக ரஷியப் பல்கலைக்கழகம் கூறியிருப்பது நிபுணா்களுக்கு வியப்பையும், சந்தேகத்தையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது.

ரஷியா்கள் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்து ஒரு வேளை அபார சக்தி படைத்த அற்புத மருந்தாகவே இருக்கலாம். இருந்தாலும், அது மனிதா்களுக்கு பாதுகாப்பானது என்றோ, கரோனாவிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் என்றோ இப்போதே அறிவித்துவிட முடியாது என்றே பெரும்பாலான நிபுணா்கள் கருதுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com