வரலாறு படைத்தது யுஏஇ: செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம்

செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை வெற்றிகரமாகச் செலுத்தி வரலாறு படைத்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ). அரபு நாடுகளில் முதல் விண்வெளித் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 
ஜப்பானின் தானேகஷிமா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஹோப் விண்கலத்துடன் திங்கள்கிழமை சீறிப் பாய்ந்து புறப்பட்ட ஹெச்2ஏ ராக்கெட்.
ஜப்பானின் தானேகஷிமா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஹோப் விண்கலத்துடன் திங்கள்கிழமை சீறிப் பாய்ந்து புறப்பட்ட ஹெச்2ஏ ராக்கெட்.


துபை: செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை வெற்றிகரமாகச் செலுத்தி வரலாறு படைத்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ). அரபு நாடுகளில் முதல் விண்வெளித் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

"அல் அமல்' அல்லது "ஹோப்' (நம்பிக்கை) எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கலம் ஜப்பானின் தானேகசிமா தீவில் உள்ள ஏவுதளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 1.58 மணிக்கு ஹெச்-2ஏ என்ற ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. 

ராக்கெட்டிலிருந்து வெற்றிகரமாகப் பிரிந்த பின்னர், விண்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு அமைப்பானது தனது முதல் சமிக்ஞையை பரிமாற்றம் செய்தது எனவும், சமிக்ஞைகள் துபையில் உள்ள திட்டக் கட்டுப்பாட்டுக் குழு மூலம் பெறப்பட்டன எனவும் "கலீஜ் டைம்ஸ்' தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை நோக்கி 49.50 கோடி கி.மீ. பயணம் மேற்கொள்ளவுள்ள இந்த விண்கலம், 2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்து, அக்கிரகத்தின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடும். செவ்வாய் கிரகத்துக்கு இதுவரை அனுப்பப்பட்டுள்ள விண்கலங்கள் குறிப்பிட்ட நேரத்தில் சுற்றிவந்து ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஆய்வு செய்கின்றன. ஆனால், இந்த ஹோப் விண்கலமானது ஒரு முழு செவ்வாய் ஆண்டு (இரு பூமி ஆண்டுகளுக்கு இணையானது) செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

200 மில்லியன் டாலர் (ரூ.1,496 கோடி) மதிப்பீட்டிலான இத்திட்டம் 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. பொறியாளர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட 135 பேர் கொண்ட குழுவினர் இத்திட்டப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் டிஜிட்டல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சர் ஒமர் சுல்தான் அல் ஒலாமா கூறியது:

அமீரகத்தின் செவ்வாய்கிரக திட்டக் குழு கடக்க வேண்டிய மிகப்பெரிய தடையாக கொவைட்-19 இருந்தது. முறையான திட்டமிடல், தூக்கமில்லா இரவுகளைக் கடந்து ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது' என்றார் அவர்.

இந்தியா வாழ்த்து
ஹோப் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதையடுத்து இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது. துபையில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இதுதொடர்பாக சுட்டுரையில் கூறியிருப்பது: 

யுஏஇ-யில் வாழும் இந்தியர்கள் சார்பாக, யுஏஇ தலைவர்கள் மற்றும் அனைத்து அமீரக நண்பர்களை வாழ்த்துகிறோம். கரோனாவின் கடினமான காலத்திலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு வணக்கம் செலுத்துகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா நிர்வாகி ஜிம் பிரைடன்ஸ்னும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமீரகத்தில் உற்சாகம்
ஐக்கிய அரபு அமீரகம் உருவாக்கப்பட்ட 50-ஆவது ஆண்டான 2021-இல் ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்தைச் சென்றடையும் என்பதால் அந்நாட்டு மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

இதுகுறித்து யுஏஇ விண்வெளித் துறை தலைவர் அகமது பெலோல் அல் ஃபலாசி கூறுகையில், "நிகழாண்டு செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல மூன்று வகையான போட்டி இருந்தது. இதில் அமெரிக்கா, சீனாவை யுஏஇ முந்தியுள்ளது என்றார். "குடிமக்கள், இங்கு வசிப்பவர்கள் என்கிற முறையில், யுஏஇ-யின் தொலைநோக்கு மற்றும் புதுமையான சகாப்தத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். யுஏஇயின் புகழ்பெற்ற வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை' என அந்நாட்டின் பொதுமக்கள் பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக "கலீஜ் டைம்ஸ்' தெரிவித்திருக்கிறது. 

கோல்டன் லோஃப் என்ற நிறுவனத்தின் பொது மேலாளர் அல் ஹூசைனி கூறுகையில், வரலாற்றில் முதல்முறையாக கவுன்ட்டவுனுக்காக அரபி எண்கள் பயன்படுத்தப்பட்டது பெருமைக்குரியது என்றார்.  

அல் துரயா வானியல் மையத்தின் முன்னாள் திட்ட ஒருங்கிணைப்பாளரான ஷனீர் நுஸ்ரத் சித்திக் கூறுகையில், விண்வெளித் துறையில் வரும் ஆண்டுகளில் யுஏஇ முக்கியமான சக்தியாக திகழும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com