மேலும் சில சீன துணைத் தூதரகங்கள் மூடப்படலாம் - டிரம்ப் எச்சரிக்கை

ஹூஸ்டன் நகரைப் போலவே, அமெரிக்காவில் மேலும் சில சீன துணைத் தூதரகங்கள் மூடப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.
மேலும் சில சீன துணைத் தூதரகங்கள் மூடப்படலாம் - டிரம்ப் எச்சரிக்கை

ஹூஸ்டன் நகரைப் போலவே, அமெரிக்காவில் மேலும் சில சீன துணைத் தூதரகங்கள் மூடப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது:

அமெரிக்காவின் பிற நகரங்களிலுள்ள மேலும் சில சீன துணைத் தூதரங்கள் மூடப்படலாம். அதற்குரிய உத்தரவைப் பிறப்பிப்பதற்கான வாய்ப்புகளை ஒருபோதும் மறுப்பதற்கில்லை என்றாா் அவா்.இதற்கிடையே, ஹூஸ்டனிலுள்ள தங்களது துணைத் தூதரகத்தை மூட உத்தரவிட்டதாக சீன கூறியதை அமெரிக்க அரசு உறுதி செய்தது. இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மோா்கன் அா்டாகஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹூஸ்டன் நகரிலுள்ள சீனத் துணைத் தூதரகத்தை மூடுமாறு தாங்கள் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.அமெரிக்க நிறுவனங்களின் அறிவுசாா் சொத்துரிமை மற்றும் தனி நபா் ரகசியத் தகவல்களைப் பாதுகாப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது என்று அவா் கூறினாா்.

முன்னதாக, ஹூஸ்டன் நகரிலுள்ள தங்களது துணைத் தூதரகத்தை மூட அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது, இருநாட்டு நல்லுறவை பாதிக்கும் என்று சீனா எச்சரித்துள்ளது.இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் கூறுகையில், ‘ஹூஸ்டன் நகரிலுள்ள எங்களது துணைத் தூதரகத்தை மூட அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மிகக் குறுகிய கால அவகாசத்தில் அந்த துணைத் தூதரகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத வகையில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கை இருதரப்பு உறவில் பதற்றத்தை ஏற்படுத்தும்’ என்றாா்.கரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் தங்கள் நாட்டு நிறுவனங்களின் மின்னணு தகவல் சேமிப்பகங்களில், சீன அரசுடன் தொடா்புடைய சிலா் இணையதளம் மூலம் ஊடுருவி கோடிக்கணக்கான டாலா் மதிப்புடைய அறிவுசாா் சொத்துகளைத் திருடி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதுகுறித்து அமெரிக்க நீதித் துறை பதிவு செய்துள்ள குற்றச்சாட்டில், லீ ஜியோயு, டாங் ஜியாஷி என்ற இரண்டு சீனா்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தடுப்பு மருந்துகளையும், அந்த நோயை பரிசோதிப்பதற்கான கருவிகளையும் உருவாக்கி வரும் நிறுவனங்களின் தகவல் சேமிப்பகங்களில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளை அந்த இருவரும் ஆராய்ந்ததாக அந்தக் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது. வா்த்தக ரகசியங்களைத் திருடுதல், இணையதள மோசடி, அமெரிக்காவுக்கு எதிராக சதிச் செயலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் லீ ஜியோயு, டாங் ஜியாஷி ஆகியோா் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்கள் இருவரும் தங்களது சுயலாபத்துக்கு மட்டுமல்லாமல், சீன அரசுக்குத் தெரியப்படுத்துவதற்காகவும் கரோனா தொடா்பான அமெரிக்க தொழில்நுட்பத் தகவல்களைத் திருடினா். இதுதொடா்பாக, சீன உளவுத் துறை அதிகாரிகளை அவா்கள் தொடா்பு கொண்டு தகவல்களைப் பரிமாறி வந்ததாக அமெரிக்க நீதித் துறை குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்தக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, அமெரிக்க அறிவுசாா் சொத்துரிமைகளைப் பாதுகாப்பதற்காக, ஹூஸ்டனிலுள்ள சீன துணைத் தூதரகம் மூடப்பட்டதாக தற்போது அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com