தானிய உற்பத்தியில் சீனாவின் சாதனை!

ஒரு நாட்டில் ஆட்சி முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு பல உதாரணங்கள் இலக்கியத்திலும் வரலாற்றுப் பக்கங்களிலும் நாம் பார்த்திருக்கிறோம்.
தானிய உற்பத்தியில் சீனாவின் சாதனை!

ஒரு நாட்டில் ஆட்சி முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு பல உதாரணங்கள் இலக்கியத்திலும் வரலாற்றுப் பக்கங்களிலும் நாம் பார்த்திருக்கிறோம். நாட்டை ஆளும் அரசு எப்படி இயங்க வேண்டும். அரசு எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை வள்ளுவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். 

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு”

அதாவது அரசுக்குப் பொருள் சேரும் வழிகளை மேலும் உருவாக்குதலும், அப்படிச் சேர்த்த பொருளை முறையாகத் தொகுத்தலும், அவற்றை தகுந்த முறையில் காத்தலும், காத்தவற்றை தக்க செலவீனங்களுக்குச் செய்தலுமே வல்லமையான அரசு என்கிறார். அந்த வகையிலே.. பொருளாதாரத்தில் சக்தி மிக்க நாடாக விளங்கும் சீனா.. மேலும் நாட்டின் பொருளாதாரத்தைப் பெருக்கி, வறுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வறுமை ஒழிப்புக்கு சீனா மிக முக்கியமாக கையில் எடுத்துள்ள விசயம் என்னவென்றால் வேளாண் உற்பத்தையை பெருக்குவது, கிராமப்புறங்களின் மூலை முடுக்குகளிலும் தொழில்நுட்பத்தை கொண்டு சென்று அதன் மூலம் உற்பத்திப் பொருட்களின் விற்பனையை அதிகரித்து விவசாயிகளின் வருவாயை பெருக்குவது ஆகும். 

வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றால் விளை நிலங்களின் மண் வளம், நீர் வளம், போன்றவற்றின் தரம் மிக முக்கியமானதாகும். அதை பேணிக்காக்கவும், விளை நிலங்களின் தரத்தை உயர்த்தவும் சீன அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

உதாரணமாக சோளம் விளைந்த பின் அவற்றின் கழிவுகளான சோளத்தண்டுகளை நிலத்தில் போட்டு உரமாக பயன்படுத்துவது. அந்த சோளத்தண்டுகள்  நிலத்தில் மக்கி மறு ஆண்டு சோளம் பயிரிடும் போது அதிக விளைச்சலுக்கு துணைபுரிகிறது. 

குறிப்பாக சீன அதிபர் ஷிச்சின்பிங் அண்மையில் பயணம் மேற்கொண்ட சீனாவின் வடகிழக்குப் பகுதியான ஜிலின் மாநிலம்  மக்காச் சோளம் மற்றும் அவரை அதிகம் விளையும் பகுதியாகும். 

மேலும் ஜிலின் மாநிலம், தற்போது கனரகத் தொழில் தலமாகவும், அமோக விளைச்சல் பெறும் இடமாகவும் மாறிவருகிறது.. தானியக் களஞ்சியமாகத் திகழும் இம்மாநிலத்திற்கு ஜூலை 22-ல் (நேற்று) பயணம் மேற்கொண்ட அவர் பசுமை உணவு மூலப்பொருள் உற்பத்தி தளத்தில் விவசாயிகளின் பணிகளை பார்வையிட்டார். அப்பகுதியின் உணவு உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் கரிசல் மண்ணின் பயன்பாடு மற்றும் விவசாயப்பணியில் இயந்தரமயமாக்கல் போன்றவற்றை பற்றி அறிந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் விவசாய நவீனமயமாக்கல் மற்றும் உணவுப் பாதுகாப்பை  முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். 2017 ஆம் ஆண்டில் 19 வது தேசிய மாநாட்டில் அவர் வழங்கிய அரசுப் பணி அறிக்கையில், நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் நாட்டின் ஸ்திரதன்மையுடன் விவசாயம், கிராமப்புறங்கள் மற்றும் விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நேரடி தொடர்பு இருக்கிறது என்பதே சீனாவின் அடிப்படைக் கருத்து என்று அவர் கூறினார் அந்த வகையில் அவரின் சமீபத்திய ஜிலின் பயணம், இன்றும் அவரின் செயல்பாடுகள் விவசாயிகள் மற்றும் கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான பாதையை நோக்கியே இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. 

அதோடு மட்டுமின்றி கடந்த ஆண்டு 50 க்கும் மேற்பட்ட விவசாய கல்லூரி நிபுணர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பல கடிதங்கள் எழுதினார். அதில் அவர், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் துணையோடு நாட்டில் விவசாயத் துறையை நவீனமயமாக்காமல் கிராமப்புறங்களை புத்துயிர் பெறச் செய்ய முடியாது என்று குறிப்பிட்டார். 

விவசாய உற்பத்தித்திறன் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை அதிகரித்து, கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக  விவசாயிகளுக்கு உதவுமாறு அவர் விவசாய நிபுணர்களைக் கேட்டுக் கொண்டார்.

தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி என்பார்கள், அரசின் இலக்கை சரியாகப் புரிந்துகொண்டு, உழைக்கும் மக்களால், ஜிலின் மாநிலத்தின் மொத்த வருடாந்திர உற்பத்தி 2019 ஆம் ஆண்டில், 2.45 பில்லியன் கிலோகிராம் அதிகரித்து 38.78 பில்லியன் கிலோகிராம்களை எட்டியது, மேலும் இம்மாநிலம் சீனாவின் நிகர வளர்ச்சியின் மொத்த அதிகரிப்பில் 41.2 சதவீதமாகக் கொண்டு முன்னிலை வகிக்கிறது. அதேசமயத்தில் இந்தியாவின் தானிய உற்பத்தி அளவை நாம் இங்கே எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்தியாவில் 2018-19 நிதியாண்டில் 285.20 மில்லியன் டன்கள் உணவு தானியம் உற்பத்தி இருந்த நிலையில், இந்த ஆண்டு 291.95 மில்லியன் டன்களை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் இது 298.3 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. ஓராண்டில் சீனாவின் ஒரு மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி அளவுக்கும், அதே ஓராண்டில் ஒட்டு மொத்த  இந்தியாவின் உணவு தானிய உற்பத்திக்கும் இடையிலான வேறுபாடு என்ன என்பதை நிச்சயம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com