
மக்களிடம் வாக்கு சேகரிக்கச் செல்லும் ஓர் அரசியல்வாதி, பொதுவாக, மக்களுக்காகச் செய்த நலத்திட்டங்களை வரிசைப்படுத்தி, தனது அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிப்பதுதான் அறம் சார்ந்த அரசியல். ஒருவேளை அத்தகைய சாதனைகள் இல்லாத பட்சத்தில், எதிர்க்கட்சியினரைத் தூற்றி அரசியல்வாதிகள் வாக்கு சேகரிப்பதைப் பார்க்க முடியும்.
ஒருசில நேரங்களில், அரசின் இயலாத் தன்மையால் உள்நாட்டில் குழப்பம் ஏற்பட்டு மக்கள் ஆட்சியாளர்களின் மீது கடும் அதிருப்தியில் இருப்பர். அத்தகைய சூழலில், மக்களின் கவனத்தை திசை திருப்ப அரசியல்வாதிகள் பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபடுவர். அத்தகைய சூழ்ச்சியில்தான் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பும் அவரின் கட்சியினரும் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு விவகாரங்களில் சீனாவைத் தினந்தோறும் சாடுவதை அவர்கள் ஒரு கோட்பாடு போன்றே கொண்டுள்ளனர். எதற்கெடுத்தாலும் சீனாவைச் சாடி, அதிலிருந்து லாபம் பெறும் டிரம்பின் உள்நோக்கத்தை உள்நாட்டு ஊடகங்களும் மக்களுமே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கலிபோர்னியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் ரேவின் கருத்துப்படி, சீனாவை தாக்குவது அரசுத் தலைவர் தேர்தலில் டிரம்புக்கு வெற்றித் தேடித் தராது என்று தெரிவித்துள்ளார். டிரம்ப் பல்வேறு கோணங்களில் சிந்தித்து செயல்படுவதை விட, உள்ளுணர்வின் அடிப்படையில் அவர் ஆட்சி நடத்தி வருகிறார். அவரின் இத்தகைய அணுகுமுறை உள்நாட்டில் பல்வேறு விவகாரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றுள், சமீபத்தில் ஏற்பட்ட 3 விஷயங்களில் டிரம்ப் அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது என்று கூறும் அளவுக்கு உள்ளது. முதலாவது, கொவைட்-19 நோய்த் தொற்று. இதில், கடுமையான நடவடிக்கைகளை எடுத்து நோயைக் கட்டுப்படுத்த டிரம்ப் தவறினார். தவறை மறைக்க, மற்றவர்களை பலிகடா ஆக்கும் செயலில் ஈடுபடத் தொடங்கினார். நிலைமையின் தீவிரத்தை உணராததுபோல் செயல்பட்டு வந்த அவர் சமீபத்தில்தான் முகக் கவசம் அணியத் தொடங்கினார். அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பது பழமொழி. மக்களும் அவ்வாறு செயல்பட்டதன் விளைவு நோய் பாதிப்பில் முதல் நாடாக அமெரிக்கா உள்ளது.
இரண்டாவதாக, பொருளாதார நெருக்கடி. நோய் பரவல் அதிகமாகி வருவதால் மக்கள் இயல்பு வாழ்க்கைகுத் திரும்ப இயலவில்லை. ஊடரங்கு, முழு முடக்கம் உள்ளிட்ட காரணங்கள், அதனால் ஏற்பட்ட வேலையிழப்பு ஆகியவை பொருளாதாரத்துக்கு பெரும் அறைகூவலை ஏற்படுத்தியுள்ளன.
மூன்றாவதாக, இனப் பாகுபாடு. வெள்ளை இன காவல்துறையினரால் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கருணையற்ற முறையில் கொல்லப்பட்டது உள்நாட்டு மக்களிடையே கடும் கோபத்தை உண்டாக்கியது. நோய் பரவலையும் பொருள்படுத்தாமல் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தகைய காரணங்களால் மக்களின் கோபமான மனநிலை டிரம்ப் அரசுக்கு எதிராகத் திரும்புகிறது. இச்சூழலில், அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தல் வர உள்ளது. இதனால், பல்வேறு விவகாரங்களில் சீனா மீது குறை கூறியோ அல்லது வசைபாடியோ உள்நாட்டுப பிரச்னையை மறைக்க அவர் முயற்சிக்கிறார். ஆனால், இத்தகைய சூழ்ச்சி ஒருவருக்குத் தேர்தலில் வெற்றித் தேடித் தராது என்பதுவே நிதர்சனம்.
தகவல் : சீன ஊடகக் குழுமம்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...