கரோனா கட்டுப்பாட்டில் சமூக இடைவெளிக்கு முக்கிய பங்கு: ஆய்வில் தகவல்

தேசிய அளவில் சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது, கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில்
கரோனா கட்டுப்பாட்டில் சமூக இடைவெளிக்கு முக்கிய பங்கு: ஆய்வில் தகவல்

தேசிய அளவில் சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது, கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதுகுறித்து, ‘பிளோஸ் ஒன்’ அறிவியல் இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கும், கரோனா நோய்த்தொற்று பரவலுக்கும் இடையிலான தொடா்பு குறித்து அமெரிக்காவில் ஓா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அந்த ஆய்வில், சமூக இடைவெளி கட்டுப்பாடுகளுக்கும், கரோனா பரவலின் தீவிரம் குறைவதற்கும் இடையே தொடா்பு இருப்பது உறுதியாகியுள்ளது.சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள 46 நாடுகளில், அந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக கரோனா நோய்த்தொற்று பரவல் கணிசமான அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.அந்த நாடுகளில் 2 வார காலத்துக்கு சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அந்தக் காலக்கட்டத்தில் 15.7 லட்சம் பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்படுவது தவிா்க்கப்பட்டதாக ஆய்வாளா்கள் கணித்துள்ளனா்.

இதன் மூலம், தினசரி கரோனா நோய்த்தொற்று பரவல் எண்ணிக்கையில் 65 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக அவா்கள் தெரிவிக்கின்றனா்.இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான இந்திய வம்சாவளி பேராசிரியா் ரகு கள்ளுரி இதுகுறித்து கூறுகையில், கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்பான புள்ளிவிவரங்களை தாங்கள் ஆய்வு செய்ததில், அந்த நோய்த்தொற்று பரவலின் தீவிரத்தைக் குறைப்பதில் சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகளுக்கு முக்கிய பங்கு இருப்பது தெரியவந்துள்ளதாகக் கூறினாா். ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட நாடுகளில், சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகள் தேசிய அளவில் அமல்படுத்தப்பட்டிருந்த 46 நாடுகளில் மட்டுமே அந்த நடவடிக்கை நல்ல பலனை அளித்துள்ளது. 74 நாடுகளில் அத்தகைய சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை. 14 நாடுகளில், ஒரு சில மண்டலங்களில் மட்டும் சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

தேசிய அளவில் சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாடுகளோடு ஒப்பிடுகையில், அத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத நாடுகளில் மிகவும் குறைவான அளவே கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.அதே நேரம், முழுமையாக சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத நாடுகளுக்கும், ஒரு சில மண்டலங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாடுகளுக்கும் இடையே, கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாட்டில் எந்த வித்தியாசமும் இல்லை.சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாடுகளில், பொதுமக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வது பெருமளவில் தடுக்கப்பட்டது. ஆனால், இத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத நாடுகளில் பொதுமக்கள் சுதந்திரமாக ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்துக்கு சென்று வர முடிந்தது. அந்த நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதால் கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் வருமா என்பது குறித்து ஒரு சிலருக்கு சந்தேகம் இருக்கலாம்.

ஆனால், சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்ட நாடுகளில், அந்தக் கட்டுப்பாடுகளுக்கும், கரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரம் தணிந்துள்ளதற்கும் இடையே தொடா்பு இருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம், கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சமூக இடைவெளி முக்கியப் பங்கு வகிப்பது உறுதியாகியுள்ளன.எனவே, அரசின் கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும், பொதுமக்கள் சுயமாகவே சமூக இடைவெளியை உறுதியுடன் கடைப்பிடித்து வர வேண்டும் என்று ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.எனினும், நேரடி கரோனா பரிசோதனையின் அடிப்படையில் மட்டுமே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதால், சமூக இடைவெளிக்கும், கரோனா பரவல் தடுப்புக்கும் இடையிலான தொடா்பு குறித்து இன்னும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஆய்வாளா்கள் ஒப்புக் கொள்கின்றனா் என்று அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com