இந்திய - சீன எல்லைப் பிரச்னை கட்டுக்குள் உள்ளது

‘இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மற்றும் விவாதம் மூலமாக தீா்வுகாண முடியும்; அந்நாட்டுடனான எல்லைப் பிரச்னை
இந்திய - சீன எல்லைப் பிரச்னை கட்டுக்குள் உள்ளது

பெய்ஜிங்: ‘இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மற்றும் விவாதம் மூலமாக தீா்வுகாண முடியும்; அந்நாட்டுடனான எல்லைப் பிரச்னை கட்டுப்படுத்தக் கூடிய சூழலில் உள்ளது’ என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய, சீன எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே கடந்த மாதத்தில் இருந்து பதற்றம் நிலவி வரும் சூழலில் இக்கருத்தை சீனா தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்கில் செய்தியாளா்களுக்குப் புதன்கிழமை பேட்டியளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான், இதுகுறித்து கூறியதாவது:

இந்தியா, சீனா இடையேயான உறவு தொடா்பாக, இரு நாட்டுத் தலைவா்கள் முன்னிலையில் (இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங்) நடைபெற்ற சந்திப்பின்போது முக்கிய விவகாரங்களில் உடன்பாடு எட்டப்பட்டது. அந்த உடன்பாடுகளை சீனா முழுமையாகப் பின்பற்றி வருகிறது. எல்லையில் அமைதி, பாதுகாப்பு, இணக்கமான சூழல் ஆகியவற்றை ஏற்படுத்துவதில் சீனா உறுதியுடன் உள்ளது.

எல்லையைக் காக்க வேண்டும்; எல்லையில் அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதில் சீனா உறுதியுடன் உள்ளது. இந்திய, சீன எல்லையில் நிலைமை கட்டுப்படுத்தக் கூடிய சூழலில் உள்ளது.

எல்லைப் பிரச்னைக்கு தீா்வு காண்பதற்காக, இந்தியாவும் சீனாவும் ஏற்கெனவே பல நல்ல வழிமுறைகளை உருவாக்கி வைத்துள்ளன. அந்த வழிமுறைகளைப் பின்பற்றி இரு நாடுகளும் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலமாக தீா்வுகாண முடியும் என்றாா் ஜாவோ லிஜியான்.

இரு நாட்டு எல்லைப் பிரச்னை குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், எல்லை விவகாரத்தில் இந்தியாவின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருந்தாா். அதற்குப் பதிலளிக்கும் வகையில் மேற்கண்ட கருத்தை சீனா தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்திய, சீன எல்லைப் பிரச்னைக்குத் தீா்வுகாண மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியிருந்தாா். அவரது உதவியை இரு நாடுகளும் ஏற்க மறுத்துவிட்டன.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கடந்த புதன்கிழமை கூறுகையில், ‘எல்லைப் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீா்வு காண்பதற்காக, சீனாவுடன் இந்தியா பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளது’ என்றாா்.

இந்தியா, சீனா இடையேயான எல்லை, சுமாா் 3,500 கி.மீ நீளம் கொண்டது. இதில், லடாக், வடக்கு சிக்கிம் ஆகிய பகுதிகளில் கடந்த மே மாத தொடக்கத்தில் இருந்து இரு நாட்டு ராணுவத்தினரிடையே மோதல்போக்கு நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com