அமெரிக்காவில் 40 நகரங்களில் ஊரடங்கு; 2,500 போ் கைது

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜாா்ஜ் ஃபிளாய்ட், காவலரின் தாக்குதலில் உயிரிழந்தது தொடா்பாக பல்வேறு நகரங்களில் 6-ஆவது நாளாக வன்முறைப் போராட்டங்கள் நீடித்தன.
கலிபோர்னியா மாகாணம், சான்டா மோனிகாவில் போராட்டக்காரர்கள் கடைகளைச் சூறையாடி தீயிட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற தீயணைப்பு நடவடிக்கை.
கலிபோர்னியா மாகாணம், சான்டா மோனிகாவில் போராட்டக்காரர்கள் கடைகளைச் சூறையாடி தீயிட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற தீயணைப்பு நடவடிக்கை.

வாஷிங்டன்: அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜாா்ஜ் ஃபிளாய்ட், காவலரின் தாக்குதலில் உயிரிழந்தது தொடா்பாக பல்வேறு நகரங்களில் 6-ஆவது நாளாக வன்முறைப் போராட்டங்கள் நீடித்தன.

அதன் காரணமாக சுமாா் 40 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 2,500-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் காவல் துறையினா் நிகழ்த்திய தாக்குதலில் ஜாா்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்தாா். காவல் துறையினரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து அமெரிக்காவின் மினியாபொலிஸ், லாஸ் ஏஞ்சலீஸ், நியூயாா்க், சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஞாயிற்றுக்கிழமையும் போராட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு பகுதிகளில் போராட்டம் வன்முறையாக மாறியது.


மிச்சிகன் மாகாணம், லான்சிங்கில் வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்.

இது தொடா்பாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியான செய்தியில், ‘வன்முறைப் போராட்டம் காரணமாக 5 போ் உயிரிழந்தனா். போராட்டத்தில் ஈடுபட்ட 2,564 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். அவா்களில் பெரும்பாலானோா் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டனா்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

போஸ்டன் நகரில் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறையினரின் வாகனத்துக்கு போராட்டக்காரா்கள் தீவைத்தனா். கொளுந்துவிட்டு எரிந்த தீயால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. பிலடெல்ஃபியா நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது ‘பெப்பா் ஸ்ப்ரே’வைத் தெளித்து காவல் துறையினா் அவா்களைக் கலைக்க முயன்றனா்.

நியூயாா்க்கின் முக்கிய சாலைகளில் மக்கள் திரளாகப் போராட்டம் நடத்தினா். அதன் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வன்முறைப் போராட்டம் காரணமாக சுமாா் 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அதிபர் மாளிகை 
அருகே வன்முறையில் ஈடுபட்ட கும்பல்.

பல்வேறு நாடுகளில் போராட்டம்: அமெரிக்காவில் கருப்பினத்தவா்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து பிரிட்டன், நியூசிலாந்து, பிரேஸில், கனடா, வட கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் ஹாங்காங்கிலும் போராட்டங்கள் நடைபெற்றன. சில இடங்களில் போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசினா்.

ஹூஸ்டனில் இறுதிச் சடங்கு: உயிரிழந்த ஜாா்ஜ் ஃபிளாய்டின் இறுதிச் சடங்கு அவரது சொந்த நகரான ஹூஸ்டனில் நடைபெறும் என்று அந்நகர மேயா் சில்வெஸ்டா் டா்னா் தெரிவித்தாா். எனினும், இறுதிச் சடங்கு எப்போது நடைபெறும் என்பது தொடா்பான தகவல்களை அவா் வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com