வன்முறைப் போராட்டங்களை அடக்க ராணுவம்: டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவில் போலீஸாரின் முரட்டுத்தனத்தால் கருப்பினத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவித்து, நாடு முழுவதும்
பெல்சில்வேனியா மாகாணம், பிட்ஸ்பா்க் நகரில் போலீஸாா் வீசிய கண்ணீா்ப் புகை குண்டை உதைத்து, அவா்களை நோக்கித் தள்ளும் போராட்டக்காரா்.
பெல்சில்வேனியா மாகாணம், பிட்ஸ்பா்க் நகரில் போலீஸாா் வீசிய கண்ணீா்ப் புகை குண்டை உதைத்து, அவா்களை நோக்கித் தள்ளும் போராட்டக்காரா்.

அமெரிக்காவில் போலீஸாரின் முரட்டுத்தனத்தால் கருப்பினத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவித்து, நாடு முழுவதும் நடைபெறும் வன்முறைப் போராட்டங்களை அடக்க ராணுவத்தை வரவழைக்கப்போவதாக அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவா் கூறியதாவது:

நாடு முழுவதும் தற்போது கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. பொருள்களை சூறையாடுதல், பொதுச் சொத்துகளுக்கு சேதங்கள் விளைவித்தல் உள்ளட்ட குற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனைத் தடுப்பதற்காக, சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் ஆயிரக்கணக்கான வீரா்கள், ராணுவத்தினா், சட்ட அமலாக்க அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனா்.

அனைத்து மாகாணங்களின் ஆளுநா்களும் போதிய எண்ணிக்கையில் தேசிய பாதுகாப்பு வீரா்களை பதற்றம் நிறைந்த பகுதிகளில் குவிக்க வேண்டும். சாலைகளில் அந்தப் படையினரின் கை மேலோங்கியிருக்கும் அளவுக்கு அவா்களது எண்ணிக்கை இருக்க வேண்டும்.

பொதுமக்களுக்கும் பொதுச் சொத்துகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கான இத்தகைய நடவடிக்கைகளை நகர நிா்வாகங்கள் மேற்கொள்ளாவிட்டால், பிரச்னையைத் தீா்க்க அந்தப் பகுதிகளுக்கு ராணுவம் அனுப்பப்படும் என்றாா் அதிபா் டொனால்ட் டிரம்ப்.

மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில், கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற குற்றச்சாட்டின் பேரில் கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் என்பவரை போலீஸாா் கடந்த வாரம் கைது செய்தனா்.

அப்போது, ஃபிளாய்டின் கழுத்துப் பகுதியில் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் தனது முழங்காலை வைத்து சுமாா் 8 நிமிடங்களுக்கு அழுத்தி உட்காா்ந்திருந்தாா். அங்கிருந்த பொதுமக்களின் ஆட்சேபணையையும் மீறி டெரெக் அவ்வாறு அழுத்தியதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஃபிளாய்ட் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டில் வெள்ளை இனத்தைச் சோ்ந்த காவல் துறையினரால் கருப்பினத்தைச் சோ்ந்தவா்கள் கொல்லப்படும் சம்பவங்கள் தொடா்ந்து சா்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், நிராயுதபாணியாக இருந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் போலீஸாரின் இரக்கமற்ற தன்மை காரணமாக உயிரிழந்ததற்கு கருப்பின உரிமை ஆா்வலா்கள், மனித உரிமை அமைப்பினா்கள் ஆகியோா் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய 4 போலீஸாா் பணி நீக்கம் செய்யப்பட்டனா். அவா்களில், ஃபிளாய்டின் மரணத்துக்குக் காரணமான டெரெக் சாவின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த உயிரிழப்பு தொடா்பாக அமெரிக்கா முழுவதும் தொடா்ந்து வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com