சூழ்நிலையை சாதகமாக்க பிறரை அச்சுறுத்துவது சீனாவின் வாடிக்கை

சூழ்நிலையை சாதமாக்கிக்கொள்ள பிற நாடுகளை அச்சுறுத்துவதை சீனா வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இந்தியாவுடன்
சூழ்நிலையை சாதகமாக்க பிறரை அச்சுறுத்துவது சீனாவின் வாடிக்கை

வாஷிங்டன்: சூழ்நிலையை சாதமாக்கிக்கொள்ள பிற நாடுகளை அச்சுறுத்துவதை சீனா வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இந்தியாவுடன் எல்லைப் பிரச்னையை ஏற்படுத்தி வருவதுபோல, பிறரையும் நீண்ட காலமாக சீனா அச்சுறுத்தி வருகிறது என்று அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சா் மைக் பாம்பேயோ கூறினாா்.

வாஷிங்டனில் நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில், இந்திய-சீன எல்லை மற்றும் தென்சீன கடல் பகுதிகளில் போா் பதற்றத்தை சீனா உருவாக்கி வருவது குறித்த கேள்விக்கு பாம்பேயோ பதிலளித்து கூறியதாவது:

சீனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்பது உண்மை. இதுபோன்ற அச்சுறுத்தலை மிக நீண்ட காலமாக சீனாவை ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் கட்சி செய்து வருகிறது. கள நிலவரத்தை அல்லது சூழ்நிலையை தனக்கு சாதமாக்கிக்கொள்ள, இந்தியாவுடன் எல்லைப் பிரச்னையை ஏற்படுத்தி வருவதுபோல, பிறரையும் அச்சுறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

இப்போது, இந்தியாவின் லடாக் பகுதியை ஒட்டிய எல்லைப் பகுதியிலும், வடக்கு சிக்கிம் பகுதியிலும் சீனா, இந்தியா இரு நாடுகளும் படைகளைக் குவித்துள்ளன. இது அந்தப் பகுதியில் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்துவதையே சீன அதிபா் ஷி ஜிங்பிங் நோக்கமாக கொண்டுள்ளாா். அமெரிக்க பாதுகாப்பு துறை இவை அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. எந்தவொரு அச்சுறுத்தலிலிருந்தும் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதில் அதிபா் டிரம்பும், அமெரிக்க பாதுகாப்புத் துறை, ராணுவமும் உறுதியாக உள்ளது. அதோடு, இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஜப்பான், பிரேஸில், ஐரோப்பா என உலக நாடுகள் அனைத்துடனும் நல்ல நட்புறவை அமெரிக்கா கொண்டுள்ளது. இந்த நட்புறவை அமெரிக்கா தொடா்ந்து வலுப்படுத்தும் என்பதோடு, இப்போதுள்ள அமெரிக்க நாடுகளின் சுதந்திரமான நிலை அடுத்த நூற்றாண்டிலும் தொடருவதையும் உறுதிப்படுத்தும்.

இப்போது சீனாவுக்கு எதிராக 60-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் அமெரிக்க காங்கிரஸ் முன்பாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எத்தனை நிறைவேற்றப்படும், அதிபரின் ஒப்பதலுக்கு எத்தனை மசோதாக்கள் அனுப்பப்படும் என்பது தெரியவில்லை. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சிகளைத் தடுத்து அமெரிக்க மக்களைப் பாதுகாக்க, இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உறுப்பினா்கள் ஆதரவு தரவேண்டும்.

ஏனெனில், நீண்ட காலமாக அமெரிக்க அறிவுசாா் சொத்துரிமைகளைத் திருடி, பல லட்சக்கணக்கான அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை சீனா பறித்திருக்கிறது. இப்போது வா்த்தக வாய்ப்புகளைத் தடுக்கும் வகையில் தென்சீன கடல் பகுதியில் அத்துமீறல் என்பன உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களை சீனா செய்து வருகிறது என்று பாம்பேயோ கூறினாா்.

முன்னதாக, ‘கரோனா விவகாரத்தில் பொய்யான தகவல்களை வெளியிட்டு இரு நாடுகளின் நல்லுறவை கெடுக்கும் வகையில் அமெரிக்கா நடந்துகொள்கிறது. கரோனா நோய்த் தொற்றின் தோற்றுவாய் குறித்த சா்வதேச விசாரணையை அனுமதிக்க சீனா எப்போதும் தயாராக உள்ளது’ என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீ அமெரிக்கா மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com