சீனாவை குறிவைக்கிறதா டிரம்ப்பின் ஜி-11 திட்டம்?

சீனாவை குறிவைக்கிறதா டிரம்ப்பின் ஜி-11 திட்டம்?

கரோனா தீநுண்மி விவகாரத்துக்குப் பின்னர் அமெரிக்கா முன்னெடுக்கும் சர்வதேச அளவிலான எந்தவொரு நடவடிக்கையையும் சீனாவுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது.

கரோனா தீநுண்மி விவகாரத்துக்குப் பின்னர் அமெரிக்கா முன்னெடுக்கும் சர்வதேச அளவிலான எந்தவொரு நடவடிக்கையையும் சீனாவுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது. ஏற்கெனவே வர்த்தகப் போரில் ஈடுபட்டு வந்த இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில், கொவைட்-19 தீநுண்மிக்குப் பின்னர் மிகப்பெரிய விரிசல் விழுந்துள்ளதே இதற்குக் காரணம். கரோனா விவகாரத்தில் உண்மைகளை மறைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு, இந்தியாவுடனான எல்லை பிரச்னை, ஹாங்காங் தன்னாட்சி அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் இயற்றியுள்ள சட்டம் என சீனாவின் செயல்பாடுகளை அமெரிக்கா கண்டித்தபோதெல்லாம் அதை கடுமையாக மறுத்தது சீனா. இப்போது ஜி-7 அமைப்பை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்கிற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் விருப்பத்தையொட்டி ஆரம்பித்திருக்கிறது அடுத்த பிரச்னை.

1975-76-களில் தொடங்கப்பட்ட ஜி-7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பாரம்பரியமான 7 தொழில்துறை நாடுகளிடையே மற்றும் சர்வதேச நாடுகளுக்கு இடையிலான பொருளாதார கட்டமைப்பே இந்த ஜி-7 அமைப்பு. ஆண்டுதோறும் இந்த நாடுகளின் தலைவர்கள் கூடி, பருவநிலை மாற்றம், பொருளாதாரம், பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள். நிகழாண்டு வரும் ஜூன் 10-12-இல் அமெரிக்காவில் நடைபெறவிருந்த ஜி-7 அமைப்பின் 46-ஆவது உச்சிமாநாட்டை கரோனா பிரச்னையால் செப்டம்பர் வரை ஒத்திவைத்துள்ளார் அதிபர் டிரம்ப்.

விரிவாக்கப்படும் ஜி-7...
ஆண்டுதோறும் ஜி-7 அமைப்பின் உச்சிமாநாடு நடைபெறும் நாட்டின் தலைவர், சிறப்பு அழைப்பாளர்களாக ஓரிரு நாடுகளின் தலைவர்களை அழைப்பார். அந்த வகையில் கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் அழைத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று பிரான்ஸின் பியாரிட்ஸ் நகரில் கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற மாநாட்டில் இருவரும் கலந்துகொண்டனர். 

அந்த வரிசையில் நிகழாண்டு மாநாட்டை நடத்தும் நாடு என்ற வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சிறப்பு அழைப்பாளராக ரஷிய அதிபர் புதின், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை மாநாட்டுக்கு அழைத்திருந்தார். 

அத்துடன் நில்லாமல், ஜி-7 அமைப்பில் மேலும் 4 நாடுகளை இணைத்து ஜி-11 அமைப்பாக மாற்ற வேண்டும் எனவும் டிரம்ப் விருப்பம் தெரிவித்தார். அதன்படி, தென்கொரியா, ஆஸ்திரேலியா, ரஷியா, இந்தியா ஆகிய நாடுகள் ஜி-11 அமைப்பில் இணைய வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சீனாவுக்கு எதிரானதா?
"ஜி-7 அமைப்பானது இப்போதைய உலகை சிறிதும் பிரதிபலிக்கவில்லை; அது விரிவுபடுத்தப்பட வேண்டும்' என்பது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்து. அதேவேளையில், இந்த முயற்சி சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் காய்நகர்த்தல் என்கிற பார்வையும் முன்வைக்கப்படுகிறது. கரோனா தீநுண்மி விவகாரத்தில் சீனா உலக நாடுகளுக்குப் பதிலளித்தே தீர வேண்டும் என டிரம்ப் அடிக்கடி கூறிவரும் நிலையில், சீன எதிர்ப்பு முயற்சியை ஊக்குவிக்கும் ஒரு தளமாக ஜி-11 அமைப்பைப் பயன்படுத்த அவர் முயற்சிக்கிறார் எனக் கூறப்படுவதில் ஆச்சரியம் இல்லை. இருப்பினும் டிரம்ப்பின் விருப்பத்துக்கு வேறு காரணங்களும் இருக்கின்றன.

ஜி-7 அமைப்பில் சில நாடுகளுடன் டிரம்ப்புக்கு நல்ல உறவு இல்லை. மேலும் சில நாடுகளைச் சேர்ப்பதன் மூலம் நட்பு வட்டத்தை அதிகரிக்க இயலும். மேலும், சீனாவுக்கு எதிரான வலுவான ஓர் அமைப்பாக இதை கட்டமைக்க முடியும் என டிரம்ப் நம்புவதற்கும் இடம் உண்டு.

எளிதல்ல
டிரம்பின் அழைப்புக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் பதிலளிக்கும் முன்பே முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்தது சீனா. "அனைத்து சர்வதேச அமைப்புகளும் நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையை நிலைநிறுத்தவும், உலக அமைதி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உகந்ததாக இருக்க வேண்டும் என சீனா நம்புகிறது. ஆனால், சீனாவுக்கு எதிராக ஒரு சிறிய வட்டத்தை வரையும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும், செல்வாக்கற்றதாக மாறும்' என அந்நாடு தெரிவித்த கருத்து, அமெரிக்காவின் முயற்சியை அது துளியும் விரும்பவில்லை எனத் தெளிவுபடுத்துகிறது.

எந்தவொரு சர்வதேச அமைப்பையும் விரிவுபடுத்த அந்த அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். முதல் முறையாக ஜி-7 அமைப்பின் தலைமைப் பதவியை டிரம்ப் வகிக்கும் இந்த வேளையில், அமைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்கிற அவரது விருப்பத்துக்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமன்றி, இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் இணைவதற்கு அதன் தற்போதைய உறுப்பு நாடுகளும் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். ஜி-7 செயல்திட்டத்தை மாற்றியமைக்க அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை என ஏற்கெனவே பிரான்ஸ் கூறி வருகிறது. ஆதலால், ஜி-7 விரிவாக்கம் வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சிமாநாட்டிலேயே நடைபெறும் என எதிர்பார்க்க முடியாது. அதற்குச் சில காலம் ஆகலாம்.

4 நாடுகள் ஏன்?
ஜி-11 அமைப்பில் தென்கொரியா, ஆஸ்திரேலியா, ரஷியா, இந்தியா ஆகிய 4 நாடுகள் இணைய வேண்டும் என டிரம்ப் அழைப்பு விடுத்ததற்குப் பின்னணியில் சில உறுதியான முடிவுகள் உள்ளன. ஆசியாவில் மக்கள்தொகை, பொருளாதாரம், ராணுவ பலம் என சீனாவை நெருங்கும் அளவு உள்ள ஒரே நாடு இந்தியாதான். தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் வலிமையான நாடு தென்கொரியா. சீனா தனது செல்வாக்கை அதிகரித்து வரும் தெற்கு பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இயல்பான கூட்டாளியாக உள்ள நாடு ஆஸ்திரேலியா.

ஜி-7-க்கு முந்தைய வடிவமான ஜி-8 அமைப்பில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த நாடு ரஷியா. 2014-இல் உக்ரைனின் கிரீமியா பகுதியை ரஷியா இணைத்துக் கொண்ட விவகாரத்தைத் தொடர்ந்து, ஜி-8 அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. இருப்பினும் அதை மீண்டும் அமைப்பில் சேர்க்க டிரம்ப் விரும்புவதற்கு காரணம், ரஷியாவின் ராணுவ பலம். மேலும், சீனாவுடன் நீண்ட எல்லையைப் பகிர்ந்துகொண்டிருக்கும் நாடு என்ற காரணமும் அடங்கும்.

ரஷியாவுக்கு எதிர்ப்பு
டிரம்ப் அழைப்பை ஏற்று ஜி-7 மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், ரஷியாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு ஆஸ்திரேலியாவுக்கு நெருடலை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்ற பயணிகள் விமானம் உக்ரைன் வான் எல்லையில் 2014, ஜூலை 17-ஆம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 38 ஆஸ்திரேலியர்கள் உள்பட 283 பேர் கொல்லப்பட்டனர். ரஷிய ஆதரவு பெற்ற உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்ததால், ரஷியாவுக்கு எதிராக பழிவிழுந்தது. கொடுமையான அந்த சம்பவத்தை மறக்க ஆஸ்திரேலியா தயாராக இல்லை. அதேபோல், ஜி-11 அமைப்பில் ரஷியாவை இணைக்க பிரிட்டன், கனடாவும் அதிருப்தி தெரிவித்துள்ளன.

இந்தியாவின் நிலைப்பாடு
ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜி-11 விரிவாக்கத்தில் இந்தியா இடம்பெற வேண்டும் என்கிற விருப்பத்தையும் தெரிவித்திருந்தார். அதற்கு இந்தியா அதிகாரபூர்வமாக இன்னும் பதிலளிக்கவில்லை. இருப்பினும், ஜி-11 அமைப்பில் இணைவது இந்தியாவுக்கு சாதகமானதுதான் என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு அடுத்து வலிமையான அமைப்பான ஜி-7 விரிவாக்கத்தில் இந்தியா இணைவதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிக்கும், பல பிரச்னைகளுக்கு தீர்வுகாண உதவும் என்கிற கருத்து எழுந்துள்ளது.

ஜி-7, ஜி-20: வித்தியாசம் என்ன?
ஜி-7 அமைப்பைப் போலவே ஜி-20 அமைப்பும் உள்ளது. ஜி-7 அமைப்பு பொதுவாக நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்றால், ஜி-20 அமைப்பு உலகப் பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும். ஜி-20 அமைப்பில் அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரேசில், கனடா, ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், சவூதி அரேபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பினராக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com