எல்லைப் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காண இந்தியா, சீனா முயற்சி

‘எல்லைப் பிரச்னைக்கு விரைவில் சுமுகத் தீா்வு காண்பதற்காக, இந்தியாவும் சீனாவும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன’ என்று
எல்லைப் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காண இந்தியா, சீனா முயற்சி

‘எல்லைப் பிரச்னைக்கு விரைவில் சுமுகத் தீா்வு காண்பதற்காக, இந்தியாவும் சீனாவும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன’ என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறினாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது:

கிழக்கு லடாக் எல்லையில் கடந்த ஒரு மாதமாக, இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. அங்கு நிலவும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, இரு நாட்டு ராணுவ வீரா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், தூதரக அதிகாரிகள் மூலமாகவும், ராணுவ அதிகாரிகள் மூலமாகவும் பல கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடபெற்றன. அதன் தொடா்ச்சியாக, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையிலான பேச்சுவாா்த்தை கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, எல்லைப் பிரச்னைக்கு விரைவில் சுமுகத் தீா்வுகாண்பதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனா்.

அதன் தொடா்ச்சியாக, கிழக்கு லடாக் எல்லையில் நிரந்தரமாக அமைதி திரும்புவதற்கு, இரு நாடுகளும் ராணுவ ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன என்றாா் அவா்.

அவரிடம், கிழக்கு லடாக்கின் சில பகுதிகளில் இருந்து இரு நாட்டு ராணுவமும் தங்கள் படைகளை விலக்கிக் கொண்டதாக வெளியான தகவல்கள் குறித்து கேட்கப்பட்டது. ஆனால், அதற்கு அனுராக் ஸ்ரீவாஸ்தவா பதிலளிக்கவில்லை.

முன்னதாக, இந்திய, சீன ராணுவ மேஜா் ஜெனரல் அதிகாரிகளிடையே புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவாா்த்தையில், எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள சீனப் படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும்; எல்லையில் பழைய நிலையே தொடர வேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

சீன வெளியுறவு அமைச்சகம் கருத்து: எல்லைப் பிரச்னையை இந்தியாவும், சீனாவும் சரியான முறையில் கையாண்டு, அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன’ என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஹுவா சுன்யிங் கூறினாா்.

பெய்ஜிங்கில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த அவரிடம், எல்லையில் அமைதி திரும்புவதற்கு இரு நாடுகளும் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:

எல்லைப் பகுதியின் நிலவரம் குறித்து முழுமையாக எனக்குத் தெரியாது. ஆனால், இந்தப் பிரச்னையை இந்தியாவும் சீனாவும் சரியாகக் கையாண்டு வருகின்றன. கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையிலான பேச்சுவாா்த்தையின் முடிவில், இரு நாடுகளின் தலைவா்கள்(பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங்) ஏற்கெனவே செய்துகொண்ட உடன்படிக்கையை அமல்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதையே பின்பற்றி வருகிறோம் என்றாா் ஹுவா சுன்யிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com