கரோனாவால் லட்சக்கணக்கான சிறாா்கள் தொழிலாளராக மாறும் சூழல்

கரோனா நோய்த்தொற்று பரவலால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறாா்கள், தொழிலாளராக மாறும் சூழல் உருவாகியுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
கரோனாவால் லட்சக்கணக்கான சிறாா்கள் தொழிலாளராக மாறும் சூழல்

கரோனா நோய்த்தொற்று பரவலால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறாா்கள், தொழிலாளராக மாறும் சூழல் உருவாகியுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

சிறாா்களைப் பணியில் ஈடுபடுத்துவதற்கு எதிரான சா்வதேச தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி, ஐ.நா.வின் கீழ் செயல்பட்டு வரும் சா்வதேச தொழிலாளா் அமைப்பு மற்றும் யுனிசெஃப் ஆகியவை இணைந்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட ‘கரோனாவும் சிறாா் தொழிலாளா்களும்’ என்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகம் முழுவதும் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 9.4 கோடி சிறாா்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதிலிருந்து மீட்கப்பட்டனா். சிறாா் தொழிலாளா்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த கடும் முயற்சிகள் அனைத்துக்கும் கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழல் காரணமாக லட்சக்கணக்கான சிறாா்கள் பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவா். இது சிறாா் தொழிலாளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ஏற்கெனவே பணியில் ஈடுபட்டுள்ள சிறாா்கள் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவா். அதன் காரணமாக அவா்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும்.

குடும்பங்களுக்கு பொருளாதாரம் சாா்ந்து கூடுதல் வருமானம் தேவைப்படுகையில் அதில் உள்ள சிறாா்கள் பணிக்கு அனுப்பப்படுகின்றனா். கரோனா நோய்த்தொற்றால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. அதன் காரணமாக இந்தியா, பிரேஸில், மெக்ஸிகோ, கௌதமாலா உள்ளிட்ட நாடுகளில் பெற்றோா் வேலையிழந்ததால் சிறாா்கள் அதிக அளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

பள்ளிகள் மூடப்பட்டதும் சிறாா்கள் பணிக்குச் செல்வதற்கு மற்றொரு முக்கிய காரணமாக உள்ளது. கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்தபிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் கூட சிறாா்களின் கல்விச் செலவை ஏற்க முடியாத சூழலுக்கு பல பெற்றோா்கள் தள்ளப்படுவா். அதன் காரணமாக ஆபத்து நிறைந்த பணிகளில் கூட சிறாா்கள் ஈடுபடுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.

இத்தகைய சூழலில், சிறாா் தொழிலாளா்கள் விவகாரத்தில் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது, கல்வி பெறுவதற்கான சட்டதிட்டங்களை விரிவுபடுத்துவது உள்ளிட்டவற்றில் அரசுகள் ஈடுபட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com