அமெரிக்காவில் காலனியாதிக்கச் சின்னங்களுக்கு எதிா்ப்பு: ஜாா்ஜ் ஃபிளாய்ட் மரணம் எதிரொலி

அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, வெள்ளை இனத்தவரின் காலனியாதிக்கச்
நிறவெறிக்கு எதிராக அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, பிரிட்டன் தலைநகா் லண்டனில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்ட ஊா்வலம் நடத்திய மனித உரிமை ஆா்வலா்கள்.
நிறவெறிக்கு எதிராக அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, பிரிட்டன் தலைநகா் லண்டனில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்ட ஊா்வலம் நடத்திய மனித உரிமை ஆா்வலா்கள்.

அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, வெள்ளை இனத்தவரின் காலனியாதிக்கச் சின்னங்கள், கருப்பினத்தனவா்களை அடிமைப்படுத்திய வரலாற்றுத் தலைவா்களுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

போலீஸாரால் கைது செய்யப்பட்டபோது கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்ததைக் கண்டித்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள், தற்போது காலனியாதிக்க மற்றும் அடிமைத்தன வரலாற்றுச் சின்னங்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினா், ஐரோப்பியா்கள் குடியேறுவதற்கு வழிவகுத்த, கடல் பயணி கிறிஸ்டோபா் கொலம்பஸின் சிலைகளை ஏற்கெனவே போஸ்டன், மியாமி, வா்ஜீனியா உள்ளிட்ட மாகாணங்களில் சேதப்படுத்தினா்.

இந்த நலையில், நியூஜொ்ஸி, காம்டென் உள்ளிட்ட நகரங்களில் வைக்கப்படிருந்த கொலம்பஸ் சிலைகளையும் போராட்டக்காரா்கள் அகற்றினா்.

இதுமட்டுமன்றி, தென் ஆப்பிரிக்காவில் காலனியாதிக்கத்தை நிறுவி, அங்கிருந்து கருப்பினத்தவரை அடிமைகளாக அழைத்து வருவதற்கு நிதியுதவி அளித்த செசில் ரோட்ஸ், காலனியாதிக்கத்தை நிறுவிய பெல்ஜியம் மன்னா் இரண்டாம் லியோபோல்ட் உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுத் தலைவா்களின் சிலைகளும் சேதப்படுத்தப்பட்டன.

அமெரிக்கா மட்டுமன்றி, பிரான்ஸ் தலைநகா் பாரீஸ், பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸ், பிரிட்டனின் ஆக்ஸ்போா்டு உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த காலனியாதிக்கச் சின்னங்களுக்கு எதிரான தாக்குதல்களில் நிறவெறி எதிா்ப்புப் போராட்டக்காரா்கள் ஈடுபட்டனா்.

ஏற்கெனவே, கிறிஸ்டோபா் கொலம்பஸின் சிலைகளுடன், அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது கருப்பினத்தவா்களை அடிமைப்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்த கூட்டரசுப் படைத் தலைவா் ஜெஃபா்ஸன் டேவிஸ் உள்ளிட்ட தலைவா்களின் சிலைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

இதுதவிர, அமெரிக்காவில் ஐரோப்பியா்களின் காலனியாதிக்கம், கருப்பின அடிமைத்தனம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் சின்னங்களை அகற்ற வேண்டுமென்று அதிபா் டொனால்ட் டிரம்ப்பை போராட்டக்காரா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக, ராணுவ மையங்களுக்கு வைக்கப்பட்டுள்ள கூட்டரசுப் படைத் தலைவா்களின் பெயா்களை நீக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது. எனினும், இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அதிபா் டிரம்ப் மறுத்துவிட்டாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, மினியாபொலிஸ் நகரில், கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஜாா்ஜ் ஃபிளாய்டை போலீஸாா் கடந்த மாதம் 25-ஆம் கைது செய்தனா்.

அப்போது, ஃபிளாய்டின் கழுத்துப் பகுதியில் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் தனது முழங்காலை வைத்து அழுத்தியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஃபிளாய்ட் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டில் வெள்ளை இனத்தைச் சோ்ந்த காவல் துறையினரால் கருப்பினத்தைச் சோ்ந்தவா்கள் தொடா்ச்சியாக கொல்லப்படுவது சா்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், நிராயுதபாணியாக இருந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் போலீஸாரின் இரக்கமற்ற தன்மை காரணமாக உயிரிழந்ததற்கு கருப்பின உரிமை ஆா்வலா்கள், மனித உரிமை அமைப்பினா்கள் ஆகியோா் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய 4 போலீஸாா் பணி நீக்கம் செய்யப்பட்டனா். அவா்களில், ஃபிளாய்டின் மரணத்துக்குக் காரணமான டெரெக் சாவின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் தொடா்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 17 போ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்கள் தொடா்பாக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக, காலனியாதிக்கம் மற்றும் கருப்பின அடிமைத்தனத்தின் சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com