எச்-1பி, எச்4 விசா இந்த ஆண்டு இறுதி வரை ரத்து: டொனால்ட் டிரம்ப் உத்தரவு

எச்-1பி விசாவை வழங்குவதற்கான தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
எச்-1பி, எச்4 விசா இந்த ஆண்டு இறுதி வரை ரத்து: டொனால்ட் டிரம்ப் உத்தரவு


வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியுரிமை இல்லாத வெளிநாட்டினர் தங்கி பணியாற்ற அவசியமான எச்-1பி விசாவை வழங்குவதற்கான தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்த புதிய உத்தரவால் இந்த ஆண்டு அமெரிக்காவில் பணியாற்ற விண்ணப்பித்திருக்கும் 2,25,000 பேரின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. இவர்களில் குறிப்பாக 85 ஆயிரம் இந்தியர்களின் விண்ணப்பங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

மேலும், விசா வழங்குவதற்கான நடைமுறைகளை மாற்றும்படி உத்தரவிட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப், விசாவுக்கு அனுமதி வழங்கும் போது தகுதியை அடிப்படையாக எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் சுமார் 5,25,000 அமெரிக்கர்களுக்கு பணி வாய்ப்பு உருவாக்கப்படும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய உத்தரவால், அமெரிக்காவில் எச்-1பி விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களில், அதிகம் படித்த மற்றும் அதிக ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். 

எச்-1பி விசாவுடன் எச்4 விசாவையும் நிறுத்தி வைத்திருக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப், மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஜே1 விசாக்களுக்கும் ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளார். அதில், கரோனாவை குணப்படுத்த முன்வரும் மருத்துவர்களுக்கு மட்டுமே ஜே1 விசா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, கரோனா தொற்றால் வேலை வாய்ப்பை இழந்திருக்கும் பல இளைஞர்களுடன், தற்போது அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் பணி வாய்ப்பு அதிகளவில் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களின் பங்குதாரர்கள் டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது நாட்டின் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர். 

வெளிநாடுகளில் இருந்து வந்து பணியாற்றும் பல்வேறு ஊழியர்களால்தான், அமெரிக்காவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. உலகளவில் தொழில்நுட்பத் துறையில் அமெரிக்கா முதல் இடத்தில் இருப்பதற்கும் அதுவே காரணம் என்றும், அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும், வாய்ப்புகள் அனைவருக்கும் பரவலாக்கப்பட வேண்டும் என்று கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கருத்துக் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com