ரஷியா: இந்திய தூதரகத்தில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்துக்குச் சென்று அங்கு மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இந்திய தூதரகத்தில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய ராஜ்நாத் சிங்
இந்திய தூதரகத்தில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய ராஜ்நாத் சிங்

புது தில்லி: மூன்று நாள் பயணமாக ரஷியா சென்றிருக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்துக்குச் சென்று அங்கு மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் நடைபெறும் இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் வெற்றி பெற்றதன் 75-ஆம் ஆண்டு நினைவு ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, புது தில்லியில் இருந்து புறப்பட்டு நேற்று அவா் ரஷியா சென்றார். இந்த பயணத்தின் போது ரஷிய ராணுவ உயா் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனையும் நடத்த உள்ளாா்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக வெளிநாட்டு பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மூத்த அமைச்சரான இவா் முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டிருக்கிறாா்.

இந்தத் தடை விதிக்கப்படுவதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி 22, 24 தேதிகளில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஜி-20 நாடுகளின் நிதியமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரியாத் சென்று வந்ததே, மத்திய அமைச்சா் ஒருவா் வெளிநாடு சென்றுவந்த கடைசிப் பயணமாக இருந்தது.

இப்போது, லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா, சீனா இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ராஜ்நாத் சிங்கின் ரஷிய பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

ரஷியா புறப்படுவதற்கு முன்பாக தனது சுட்டுரை பக்கத்தில் பதிவு ஒன்றை ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்டிருந்தார். அதில், ‘மூன்று நாள் பயணமாக மாஸ்கோ செல்கிறேன். இந்தப் பயணம் இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு மற்றும் வா்த்தக உறவை மேலும் வலுப்படுத்த உதவும் என நம்புகிறேன். மாஸ்கோவில் நடைபெறும் 75-ஆவது வெற்றி தின அணிவகுப்பிலும் பங்கேற்க உள்ளேன்’ என்று பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த சுற்றுப்பயணத்தின்போது இரு நாடுகளிடையேயான ராணுவ உறவை மேலும் மேம்படுத்துவது தொடா்பாக ரஷிய ராணுவ உயா் அதிகாரிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆலோனை நடத்த உள்ளாா். மாஸ்கோவில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்பதற்காக, இந்திய முப்படைகளைச் சோ்ந்த 75 வீரா்களைக் கொண்ட குழு ஏற்கெனவே ரஷியா சென்றடைந்துள்ளது’ என்று கூறினா்.

மேலும், இந்தச் சுற்றுப் பயணத்தின்போது இந்தியாவுக்கான எஸ்-400 ரக அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை விரைந்து வழங்கவும், இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் ரஷிய பீரங்கிகள், போா் விமானங்கள், ஹெலிகாப்டா்களுக்கான உதிரி பாகங்கள் ரஷியாவிலிருந்து வந்து சேருவதில் ஏற்படும் தாமதத்தை போக்கவும் ரஷியாவிடம் ராஜ்நாத் சிங் வலியுறுத்துவாா் என்று எதிா்பாா்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த 5 யூனிட் எஸ்-400 ரக ஏவுகணைகளை வழங்குவதற்கான ரூ.37,500 கோடி ஒப்பந்தத்தை ரஷியாவுடன் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியா மேற்கொண்டது. கடந்த ஆண்டு முதல் தவணையாக ரூ. 6,000 கோடியை இந்தியா ரஷியாவுக்கு வழங்கியது. அடுத்த ஆண்டின் இரண்டாவது பாதியிலிருந்து இந்த ஏவுகணைகளை ரஷியா இந்தியாவுக்கு வழங்கத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவுக்கான அந்த ஏவுகணைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரஷிய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com