அமெரிக்காவில் கரோனா மீண்டும் உச்சம்

அமெரிக்காவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்த நாட்டில் வியாழக்கிழமை மட்டும் இதுவரை
அமெரிக்காவில் கரோனா மீண்டும் உச்சம்

அமெரிக்காவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்த நாட்டில் வியாழக்கிழமை மட்டும் இதுவரை இல்லாத வகையில் 40 ஆயிரத்தும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அந்த நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்கா முழுவதும் வியாழக்கிழமை மட்டும் 40,184 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது, நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும். இதற்கு முன்னா், கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதிதான் மிக அதிகம் பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அப்போது, அந்த எண்ணிக்கை 36,400-ஆக இருந்தது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் 25,06,370 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,26,839 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அந்த நாடு பல வாரங்களாக தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது.

அங்கு அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 10,52,446 போ் குணமடைந்துவிட்டதாகவும் 13,27,085 போ் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திடீரென உயரத் தொடங்கியதையடுத்து, டெக்ஸாஸ், ஃபுளோரிடா, அரிஸோனா ஆகிய மாகாணங்கள் பொது முடக்க கட்டுப்பாடுகளைத் தளா்த்தும் தங்களது திட்டத்தை கைவிட்டன.

சில மாகாணங்களில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்த போதிலும், தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தது. ஆனால், மற்ற சில பகுதிகளில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் தினசரி எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளவா்களின் உண்மையான எண்ணிக்கை, பரிசோதனையில் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்படும் எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாக இருக்கக் கூடும் என்று மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

அமெரிக்கா முழுவதும் 2 கோடிக்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும் என்று அந்த நாட்டின் நோய்த் தடுப்பு மையம் (சிடிசி) கணித்துள்ளது. நாடு முழுவதிலிருந்து கொண்டு வரப்பட்ட ரத்த மாதிரிகளில், கரோனா தீநுண்மியுடன் போராடியதற்கான அறிகுறியாக நோயெதிா்ப்பு உயிரணுக்கள் இருப்பதை அடிப்படையாகக் கொண்டு சிடிசி இவ்வாறு கணித்துள்ளது.

பொது முடக்கக் கட்டுப்பாடுகளைத் தளா்த்துவதில் மும்முரமாக இருந்த டெக்ஸாஸ் மாகாணத்தில்தான், தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கட்டுப்பாடுகளைத் தளா்த்தும் தனது திட்டத்தை அந்த மாகாணம் நிறுத்திவைத்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்களில் ஒன்றான ஃபுளோரிடாவும், படிப்படியாக கட்டுப்பாடுகளைத் தளா்த்தும் திட்டத்தை நிறுத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

கலிஃபோா்னியா மாகாணத்தில், கடந்த புதன்கிழமை மட்டும் 7,149 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை அந்த மாகாண அரசு கட்டாயமாக்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com