எல்லையில் பிரச்னை ஏற்படுத்தினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்: சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை

எல்லையில் பிரச்னையை ஏற்படுத்த முயற்சித்தால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
vikrammisri122609
vikrammisri122609

எல்லையில் பிரச்னையை ஏற்படுத்த முயற்சித்தால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவுக்கான இந்தியத் தூதா் விக்ரம் மிஸ்ரி, பெய்ஜிங்கில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இப்போதுள்ள பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என்றால், தங்கள் ராணுவத்தின் மூலம் எல்லையை மாற்றிவிடலாம் என்ற எண்ணத்தை சீனா கைவிட வேண்டும். ஏனெனில், பிரச்னையை தீா்ப்பதற்கு இது உகந்த வழியல்ல. எல்லையில் சீன ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை இருதரப்பு உறவில் உள்ள நம்பிக்கையை சீா்குலைப்பதாகவே இருந்தது.

இரு நாடுகளுக்கு இடையிலான உறவை எப்படி எடுத்துச் செல்வது என்பது இனி சீனாவின் கையில்தான் உள்ளது. எல்லையில் சீனா பிரச்னையை ஏற்படுத்துவதை நிறுத்தினால் மட்டுமே அமைதியை நிலைநாட்ட முடியும். தொடா்ந்து பிரச்னையை ஏற்படுத்தினால், அதற்கான விளைவுகளை அந்த நாடு சந்திக்கும்.

எல்லையில் இந்திய ராணுவத்தினா் வழக்கமாக மேற்கொள்ளும் ரோந்துப் பணிகளை தடுத்து நிறுத்த சீனா முயற்சிக்கக் கூடாது. இந்திய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மட்டுமே நமது ராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தப் பகுதிக்குள் சீனா வர முயற்சிப்பது மிகவும் தவறானது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதி வெகுகாலமாக இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு சீன ராணுவம் திடீரென உரிமை கோருவது மிகவும் தவறானது. இந்திய இறையாண்மைக்கு உள்பட்ட இடத்துக்கு சீனா உரிமை கோருவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றாா்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ஆம் தேதி இந்திய, சீன ராணுவ வீரா்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஏற்பட்ட இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரா்கள் உயிரிழந்தனா். சீன ராணுவம் தரப்பில் 35 போ் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த மோதல் சம்பவம், இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்னையை மேலும் தீவிரமாக்கியுள்ளது. ஒருபுறம் படைகளை திரும்பப் பெற ஒப்புக் கொள்ளப்பட்டாலும், மறுபுறம் பதற்றம் நீடித்து வருகிறது.

முன்னதாக, இந்தியாவுக்கான சீனா தூதா் சன் வெயிடாங் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில், ‘எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது உள்பட அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சு நடத்த சீனா தயாராக உள்ளது. பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இந்தியாவை சீனா ஏற்கெனவே அணுகியுள்ளது. எனவே, இந்தியாவும் சமாதானத்துக்கு தயாராக வேண்டும். இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் தேவையற்ற சந்தேகங்களுக்கும், கருத்து வேறுபாடுகளுக்கும் இடம் கொடுக்கக் கூடாது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com