கொரிய போரின் 70-ஆவது ஆண்டு முடியாமல் தொடரும் யுத்தம்

"இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான மோதல் தேசத்தின் சக்தியை வீணடிப்பதாகும். போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைதியையும் சமாதானத்தையும் அளிப்பது நமது கடமை. நாம் ஒன்றிணைப்பைப் பற்றி பேசப் போகிறோம்.
கொரிய போரின் 70-ஆவது ஆண்டு முடியாமல் தொடரும் யுத்தம்


கொரிய போர் தொடங்கப்பட்ட 70-ஆவது ஆண்டு தினத்தை தென்கொரியாவும் வடகொரியாவும் கடந்த ஜூன் 25-ஆம் தேதி அனுசரித்தன. இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய வரலாற்றில் மிக கொடூரமான யுத்தமாகக் கருதப்படும் கொரிய போர், முற்றுப் பெறாத போராக இன்றுவரை தொடர்கிறது.

இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய 35 ஆண்டுகள் ஜப்பானின் ஆதிக்கத்தில் இருந்தது ஒருங்கிணைந்த கொரியா. அந்தப் போரில் ஜப்பானின் தோல்வியைத் தொடர்ந்து, தன்னைத் தானே சுதந்திர நாடாக பிரகடனம் செய்துகொண்டது கொரியா. சுதந்திர காற்றை சுவாசிக்கப் போகிறோம் என்ற கொரிய மக்களின் மகிழ்ச்சி சில காலம்கூட நீடிக்கவில்லை. கொரியாவை ஜப்பானின் பிடியிலிருந்து மீட்ட அமெரிக்காவும் ரஷியாவும் கொரியாவை பங்குபோடத் தீர்மானித்தன. அதன்படி, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் தென்கொரியாவும் ரஷியாவின் கட்டுப்பாட்டில் வடகொரியாவும் வந்தன. தென்கொரியாவின் தலைவராக வலதுசாரி தலைவரான சிங்மன் ரீ-யை அமெரிக்கா நியமித்தது. ஜப்பானுக்கு எதிரான போரின் கொரில்லா படைப் பிரிவு தலைவராக செயல்பட்ட கிம் சங்-இல் வடகொரியாவின் தலைவராக ரஷியாவால் நியமிக்கப்பட்டார்.

கொரிய போர் தொடக்கம்
அமெரிக்கா, ரஷியா இடையே பனிப்போர் ஆரம்பமானதைத் தொடர்ந்து, கொரிய பிரிவினை நிரந்தரமாகி தனித்தனி நாடுகளாக தென்கொரியாவும் வடகொரியாவும் உருவாகின. அதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் மோதல் ஆரம்பமானது. தென்கொரியாவின் மீது படையெடுத்து, மீண்டும் ஒருங்கிணைந்த கொரியாவை கிம் சங்-இல் தலைமையில் உருவாக்கும் நோக்கத்தில் 1950-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி வடகொரிய படைகள் தென்கொரியாவுக்குள் ஊடுருவின.

மூன்றே நாள்களில் தலைநகர் சியோல் வீழ்ந்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அமெரிக்கா களத்தில் குதித்தது. ஆனால், ஆரம்பத்தில் வடகொரிய படைகளை சமாளிக்க முடியாமல் அமெரிக்கப் படைகளும் திணறின. அமெரிக்க விமானப் படை களமிறங்கியதும் நிலைமை மாறத் தொடங்கியது. வடகொரியாவுக்குள் ஊடுருவிப் பாய்ந்த அமெரிக்கப் போர் விமானங்கள், அணைகள், வயல்வெளிகள் எனக் குறிவைத்துத் தாக்கி துவம்சம் செய்தன. வடகொரியாவுக்கு ஆதரவாக சீன, ரஷிய படைகள் துணைக்கு வரவே, போர் கடுமையான கட்டத்தை எட்டியது.

"மூன்று ஆண்டுகள் நடந்த போரில் தென்கொரியாவில் 12 லட்சம் பேரும் வடகொரியாவில் 10 லட்சம் பேரும் உயிரிழந்தனர். அமெரிக்க ராணுவத்தினர் 36,500 பேரும் சீன துருப்புகள் 6 லட்சம் பேரும் உயிரிழந்ததனர்' என சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஒருவழியாக போர் முடிவுக்கு வந்து, 1953, ஜூலை 27-ஆம் தேதி சண்டைநிறுத்த ஒப்பந்தத்தில் தென்கொரியா, வடகொரியா, அமெரிக்கா கையெழுத்திட்டன. ஆனால், நிரந்தர அமைதி உடன்படிக்கை கையெழுத்தாகவில்லை.

சமாதான முயற்சிகள்
2018-இல் அமெரிக்காவின் முயற்சியால் கொரியா உச்சிமாநாட்டில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோர் சந்தித்து "பான்முன்ஜோம்' ஒப்பந்தத்தில் 2018, ஏப்ரல் 27-ஆம் தேதி கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தின்படி, கொரிய போர் முடிவின்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை நிரந்தர அமைதி உடன்படிக்கையாக மாற்றுவதற்கு இரு நாடுகளும் செயல்படுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
 அதைத் தொடர்ந்து, 2018, ஜூன் 12-ஆம் தேதி கிம் ஜோங்-உன், அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையேயான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சந்திப்பு நடைபெற்றது. அதில், "பான்முன்ஜோம்' ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் கூட்டறிக்கையில் இருவரும் கையெழுத்திட்டனர். தங்கள் நாட்டு மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என கிம் ஜோங்-உன் கோரிக்கை விடுக்க, அணுஆயுதங்களை முற்றிலும் கைவிட்டால் வடகொரியாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாக அப்போது டிரம்ப் உறுதி அளித்தார்.

அதன்பிறகு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறாத நிலையில் வடகொரியாவின் ஆக்ரோஷமான போக்கு மீண்டும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மறந்துவிட்டதாகவும் தென்கொரியாவுடன் போர் ஏற்பட்டால் ஆணு ஆயுதத்தைப் பயன்படுத்தத் தயங்க மாட்டோம் எனவும் மிரட்டல் விடுக்கத் தொடங்கியது. உச்சகட்டமாக, கொரிய எல்லையில் அமைக்கப்பட்டிருந்த, இரு நாடுகளுக்கும் பொதுவான தகவல் தொடர்பு அலுவலகத்தை வட கொரியா கடந்த ஜூன் 16-ஆம் தேதி குண்டுவைத்து தகர்த்தது. 2018, உச்சி மாநாட்டு ஒப்பந்தங்களுக்கு மதிப்புக் குறைவு ஏற்படும் வகையில் தென்கொரியா செயல்படுவதாகவும் தங்கள் நாட்டிலிருந்து தப்பி தென்கொரியாவுக்கு சென்ற சிலர் கிம் ஜோங்-உன்னுக்கு எதிராக ஹீலியம் பலூன்கள் மூலம் அனுப்பிய துண்டுப் பிரசுரங்களை எல்லைப் பகுதியில் தென் கொரியா அனுமதித்ததாகவும் வட கொரியா குற்றஞ்சாட்டியது.

தென்கொரியாவின் அழைப்பு
கொரிய போரின் 70-ஆவது ஆண்டையொட்டி மீண்டும் ஏற்பட்டுள்ள இந்தப் பதற்றமான நிலையில், வடகொரியாவுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன். "இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான மோதல் தேசத்தின் சக்தியை வீணடிப்பதாகும். போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைதியையும் சமாதானத்தையும் அளிப்பது நமது கடமை. நாம் ஒன்றிணைப்பைப் பற்றி பேசப் போகிறோம். அதற்கு முன்னதாக சமாதானத்தை முதலில் அடைய வேண்டும். அது நீண்ட நாள் நிலைத்திருக்க வேண்டும். அதன்பிறகுதான் ஒன்றிணைப்பின் கதவை அடைய முடியும்' என அழைப்பு விடுத்திருக்கிறார்.

இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னைகளுக்கான தீர்வை ஆயுதங்கள் ஒருபோதும் தராது; பேச்சுவார்த்தைதான் அதற்கு சிறந்த வழி. 70 ஆண்டு கொரிய போர் முடிவுக்கு வருவதும், தொடர்வதும் கிம் ஜோங்-உன் கையில் இருக்கிறது.

கொரிய போரில் இந்தியா

கொரிய போர் தொடங்கியவுடன் அமைதி காப்பு நடவடிக்கைகளுக்காக தங்கள் படைகளை தென் கொரியாவுக்கு அனுப்பும்படி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஐ.நா. அழைப்பு விடுத்தது. சுதந்திரம் பெற்று 3 ஆண்டுகளே ஆன நிலையில் தனது படையை சண்டையில் ஈடுபடுத்த விரும்பாத இந்தியா, அதற்கு பதிலாக மருத்துவப் பிரிவை அனுப்பத் தீர்மானித்தது. அதன்படி, லெப்டினன்ட் கர்னல் ஏ.ஜி. ரங்கராஜ் தலைமையில் மருத்துவர்கள், ராணுவத்தினர் உள்பட 346 பேர் கொண்ட பிரிவு தென்கொரியாவுக்கு சென்றது. அங்கு போர்க் களத்தில் காயம்பட்ட வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து பேருதவி செய்தது. மொத்தம் 20 ஆயிரம் பேருக்கு காயத்துக்கான சிகிச்சையும், 2300 பேருக்கு கள அறுவை சிகிச்சையும் அளித்து, 1954-இல் நாடு திரும்பியது.

காத்திருக்கும் குடும்பங்கள்

கொரிய போரை தொடர்ந்து இரு நாடுகளையும் சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை, உறவினர்களை பிரிந்து வாழ நேரிட்டது. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பதைக் கூடத் தெரிந்துகொள்ள இயலாத நிலை. தென்கொரியா, வடகொரியா இடையே ஏற்கெனவே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி பிரிந்த குடும்பத்தினர் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு பலமுறை நடந்தேறியிருக்கிறது. ஆனால், எப்போதெல்லாம் பதற்றம் ஏற்படுமோ அப்போதெல்லாம் இந்த சந்திப்பு ஏற்பாடு கிடப்பில் போடப்படும். தென்கொரியாவை சேர்ந்த சுமார் 1.30 லட்சம் பேர் வடகொரியாவில் உள்ள தங்களது சொந்தங்களைச் சந்திக்க விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளனர். அதில் அனுமதி கிடைக்கும் முன்னரே 80 ஆயிரம் பேர் இறந்துவிட்டனர். மற்ற 50 ஆயிரம் பேர் அனுமதி கிடைக்குமா எனக் காத்திருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com