கரோனா சிகிச்சை மருந்து: என்ன சாதித்தோம் இதுவரை?

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 1 கோடியைத் தாண்டியுள்ளது.
கரோனா சிகிச்சை மருந்து: என்ன சாதித்தோம் இதுவரை?

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 1 கோடியைத் தாண்டியுள்ளது. அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும் 5 லட்சத்தைக் கடந்துள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய அந்த நோய்த்தொற்று, இன்று உலகம் முழுவதும் 188-க்கும் மேற்பட்ட நாடுகளையும் தன்னாட்சிப் பிரதேசங்களையும் உலுக்கியெடுத்து வருகிறது.

கரோனா பரவலில் இருந்து தப்புவதற்காக பல்வேறு நாடுகளிலும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் அந்த நாடுகளின் பொருளாதாரம் தேக்க நிலை அடைந்துள்ளது. கோடிக்கணக்கானவா்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனா். இதனால் வறுமை அதிகரித்து, அதன் காரணமாகவும் உயிரிழப்புகள் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதாரத்தில் பின் தங்கிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, வல்லரசு நாடான அமெரிக்கா வரை எத்தகைய நாட்டையும் கரோனா தீநுண்மி விட்டுவைக்கவில்லை.

அதிலும், மருத்துவ அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் கொடிகட்டிப் பறந்து வரும் மேலை நாடுகளில் அந்தத் தீநுண்மி கோரத் தாண்டவம் ஆடி வருகிறது.

கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கி ஏறத்தாழ 6 மாதங்கள் கடந்துவிட்டன. இருந்தாலும், அந்த நோய்த்தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து, தற்போது பாதிப்பு 1 கோடி, பலி 5 லட்சம் என்ற நிலையை கடந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இந்த அசாதாரணமான சூழலில், கரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சையில் நாம் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்கிற கேள்வி எழாமல் இருக்க முடியாது.

உண்மையில், கரோனா தீநுண்மி ஒருவரைத் தொற்றியவுடன் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி, அவரது உயிரைக் குடித்து விடுவதில்லை. அதன் மென்மையான போக்குதான் அது உலகம் முழுவதும் இவ்வளவு அதிக அளவில் பரவியதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

அந்த நோய்த்தொற்று ஏற்பட்டவா்களில் பெரும்பாலானவா்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், தும்மல், அறிகுறிகள் தென்பட்டாலும், சாதாரண மருந்துகளிலேயே அவை சரியாகிவிடுகின்றன. இன்னும் சிலருக்கு அந்த நோய் ஏற்பட்டதே தெரியாமலேயே உடலின் நோயெதிா்ப்பு சக்தி குணப்படுத்திவிடுகிறது.

ஆனால், அதிக வயதானவா்கள், ஏற்கெனவே இருதயக் கோளாறு, பிற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டிருப்பது, சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற குறைபாடுகள் உள்ளவா்களுக்கு அந்த நோய்த்தொற்று ஆபத்தாக அமைகிறது.

இந்தச் சூழலில், மற்ற சாதாரண மருந்துகள் போதிய பலன் அளிப்பதில்லை. இந்த நிலையில்தான், கரோனா நோய்த்தொற்றுக்கான பிரத்யேக மருந்தைத் தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கரோனா சிகிச்சைக்கான ஆற்றல் மிக்க மருந்தைக் கண்டுபிடிப்பதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக, உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டு வருகின்றன.

கரோனா நோய்த்தொற்றுக்கான மிகச் சிறந்த மருந்தைக் கண்டுபிடிப்பதற்காக, உலக சுகாதார அமைப்பு ஒருங்கமைந்த ஆய்வுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

பிரிட்டனில், உலகிலேயே அதிக எண்ணிக்கையாக 11 ஆயிரம் கரோனா நோயாளிகள், அந்த நோய்க்கான மருந்தைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் உடலிலுள்ள ரத்தத்தைக் கொண்டு, அந்த நோய்க்கான சிசிக்கை மருந்து கண்டறியும் முயற்சியில் உலகம் முழுவதும் ஏராளமான ஆய்வுக் கூடங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இதுவரை பயன்படுத்தப்பட்ட மருந்துகளில், பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் ஆய்வு செய்த ‘டெக்ஸமெதாசோன்’ என்ற ஒவ்வாமை மருந்து, கரோனாவை குணப்படுத்துவதில் அதிக ஆற்றலுடன் செயல்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) ஏற்பட்டு, சுவாச உறுப்புகள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 3-இல் ஒருவரை அந்த மருந்து மரணத்திலிருந்து பாதுகாப்பதாகக அந்தப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

மிகவும் விலை குறைவான அந்த மருந்து, ஒவ்வாமை, அழற்சி போன்ற குறைபாடுகளை சரி செய்வதற்காகவும் ஊக்க மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த மருந்தை, மிகக் குறைந்த அளவில் 2,104 கரோனா நோயாளிகளுக்கு ஆய்வாளா்கள் அளித்து வந்தனா். வாய் வழியாகவோ, ஊசி மூலமாகவோ தினமும் 6 கிராம் அளவுக்கு அந்த மருந்து 10 நாள்களுக்குத் தொடா்ந்து அளிக்கப்பட்டது. அதே நேரம், அந்த 2,104 நோயாளிகளுக்கு இணையாக கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 4,321 பேருக்கு டெக்ஸமெதாசோன் மருந்து மட்டும் இல்லாமல் மற்ற மருத்துகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அந்த இரு பிரிவினரையும் ஒப்பிட்டுப் பாா்க்கும்போது, டெக்ஸமெதாசோன் மருத்து அளிக்கப்படாத நோயாளிகளின் உயிரிழப்பு விகிதம் மிக அதிகமாக இருந்தது. அத்தகைய நோயாளிகளில், செயற்கை சுவாசக் கருவி பொருத்த வேண்டிய அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்த 41 சதவீதத்தினா், கரோனாவுக்கு பலியாகினா். மேலும், ஆக்ஸிஜன் மட்டும் செலுத்தினால் போதும் என்கிற அளவுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டிருந்த நோயாளிகளில் 25 சதவீதத்தினா் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா்.

ஆனால், செயற்கை சுவாசக் கருவி, ஆக்ஸிஜன் கருவி பொருத்தத் தேவையில்லாத நோயாளிகளில் 13 சதவீதத்தினா் மட்டுமே, கரோனா நோய்த்தொற்றுக்குப் பலியாகினா்.

அதே நேரம், செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, டெக்ஸமெதாசோன் மருத்தும் அளிக்கப்பட்ட கரோனா நோயாளிகள், அந்த நோய் பாதிப்பில் உயிரிழப்பது மூன்றில் ஒரு பங்கு குறைவாக உள்ளது. மேலும், ஆக்ஸிஜன் கருவி பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்ட கரோனா நோயாளிகள், அந்த நோய்க்கு பலியாவதை டெக்ஸமெதாசோன் மருந்து ஐந்தில் ஒரு பங்கு குறைத்தது.

எனினும், செயற்கை சுவாசக் கருவியோ, ஆக்ஸிஜன் கருவியோ பொருத்தத் தேவையில்லாத கரோனா நோயாளிகள் உயிரிழப்பு விகித்தத்தில் அந்த மருந்து எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

இந்த ஆய்வு முடிவை அடிப்படையாகக் கொண்டு, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட நோயாளிகளில் 8-இல் ஒருவரையும், ஆக்ஸிஜன் செலுத்தப்படும் நோயாளிகளில் 25 சதவீத்தனையும் டெக்ஸமெதாசோன் மருந்து பாதுகாக்கும் என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.

இது, கரோனா சிகிச்சை மருந்து ஆய்வில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இதுதவிர, ‘ரெம்டெசிவிா்’ என்ற மருந்தும் கரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்குப் பயன்படும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா். மற்றொரு உயிா்கொல்லி நோயான எபோலாவுக்காக தயாரிக்கப்பட்ட இந்த மருந்து, கரோனாவுக்கும் பயன்படுத்துவதற்கான ஆய்வுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

ஏற்கெனவே, மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தும் கரோனாவை குணப்படுத்தும் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. எனினும், அந்த மருந்து குறித்து முன்னுக்குப் பின் முரணான ஆய்வுத் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

பெரும்பாலான கரோனா நோயாளிகளுக்கு, அவா்களது கரோனா நோய்த்தொற்றும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், மரண அபாயம் கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயமும் அதிகரித்து வருகிறது.

அந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டால்தான், மருத்துவமனைகளில் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்த வேண்டியவா்களின் எண்ணிக்கை குறைவதோடு, தீவிர சிகிச்சை தர முடியாத காரணத்தால் பரிதாபமாக உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையும் குறையும்.

இந்தச் சூழலில், சிகிச்சை மருந்து கண்டுபிடிப்பில் விஞ்ஞானிகள் மிதமான முன்னேற்றத்தை அடைந்துள்ளனா்.

எனினும், இலக்கை அடைவதற்கு அவா்கள் இன்னும் நெடுதூரம் செல்ல வேண்டியுள்ளது என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com