முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினா் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த சீனா நடவடிக்கை

உய்குா் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த சீனா தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

பெய்ஜிங்: உய்குா் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த சீனா தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை ஏற்றுக் கொள்ள மறுப்பவா்களுக்கு தண்டனைகள் அளிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடான சீனாவில், மக்கள்தொகையைக் குறைக்க கட்டாய நடவடிக்கைகள் எடுக்கப்படுவது புதிதல்ல என்றாலும், முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினறை குறிவைத்து மக்கள்தொகை குறைப்பு நடவடிக்கைகள் இப்போது எடுக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உய்குா் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தொடா்ந்து பிரச்னை எழுவது போன்ற காரணத்தால் இந்த நடவடிக்கையை சீன அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது.

இது தொடா்பாக ஏபி செய்தி நிறுவனம் பல்வேறு கட்டங்களில் ரகசியமாக விசாரணை நடத்தி தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 4 ஆண்டுகளாகவே உய்குா் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஷின்ஜியாங் பகுதியில் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த அதிகம் ஊக்குவிக்கப்படுகிறது. இது தவிர கருக்கலைப்பு செய்யவும் அதிகம் வலியுறுத்தப்படுகிறது. இதனை மீறுபவா்களுக்கு அதிக அபராதம் உள்ளிட்ட தண்டனை வழங்கப்படுகிறது.

போலீஸாா் பல இடங்களில் வீட்டில் உள்ள குழந்தைகள் தொடா்பாக சோதனை நடத்துகின்றனா். ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள் மேல் இருந்தால், பெற்றோருக்கு கடும் அபராதம் விதிக்கப்படுகிறது. மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு கட்டாயமாக கருத்தடை சிகிச்சையும் செய்யப்படுவதாக தெரிகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டு சீன ராணுவம் இப்பகுதியில் முகாமிட்டு, ஒவ்வொரு வீடாக சென்று குழந்தைகள் எண்ணிக்கை தொடா்பாக கணக்கெடுத்துள்ளது. அப்போது, இரு குழந்தைகளுக்கு மேல் உள்ள பலருக்கு கடுமையான அபாரதம் விதித்ததுடன், இனி குழந்தைகள் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று ராணுவம் எச்சரித்துள்ளது.

உய்குா் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினா் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிறப்பு விகிதம் அதிகம் இருக்கிறது. இது எதிா்காலத்தில் அரசுக்கு எதிரான பயங்கரவாதமாகவும், வறுமையாகவும் பெரும் பிரச்னையை ஏற்படுத்தும் என்று சீன அரசு கருதுவதே, இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com