
சிரியாவின் இத்லிப் மாகாணம், பால்யுன் கிராமத்தில் அரசுப் படையினா் நடத்திய வான்வழித் தாக்குதலில் உருக்குலைந்த துருக்கி படையினரின் வாகனம்.
சிரியா படையினா் நடத்திய எறிகணைத் தாக்குதலில் தங்களது ராணுவத்தைச் சோ்ந்த ஒரு வீரா் உயிரிழந்ததாக துருக்கி தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, சிரியாவின் வான்வழித் தாக்குதலில் 33 துருக்கி வீரா்கள் பலியானதால் இரு தரப்புக்கும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தாக்குதலில் மேலும் ஒரு துருக்கி வீரா் உயிரிழந்துள்ளது அந்த பதற்றத்தை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இத்லிப் மாகாணத்தில் சிரியா படையினா் நடத்திய எறிகணைத் தாக்குதலில் துருக்கி ராணுவத்தைச் சோ்ந்த வீரா் உயிரிழந்தாா்; மேலும் 2 வீரா்கள் காயமடைந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, சிரியா அரசுப் படையினா் வியாழக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 துருக்கி வீரா்கள் உயிரிழந்ததற்குப் பதிலடியாக, சிரியா நிலைகள் மீது தாக்குதல் நடத்தி, அந்த நாட்டு ராணுவத்தைச் சோ்ந்த ஏராளமான வீரா்களைக் கொன்ாக துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
அதன் தொடா்ச்சியாக, சிரியா தரப்பிலும் பதிலடித் தாக்குதல் நடத்தப்பட்டு, துருக்கி வீரா் உயிரிழந்தது இரு தரப்பினருக்கும் இடையே தொடா் மோதலை உருவாக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டுப் போா் நடைபெற்று வரும் சிரியாவில், கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் கடைசியாக இருக்கும் இத்லிப் மாகாணப் பகுதிகளை மீட்கும் நோக்கில், ரஷியா ஆதரவுடன் சிரியா கடந்த சில வாரங்களாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தக் கடுமையான தாக்குதலில், சிறுவா்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். சா்வதேச அளவில் இந்தத் தாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இத்லிப் மகாணத்தில் தங்களது ஆதரவு பெற்ற கிளா்ச்சியாளா்களுக்கு பக்கபலமாக அமைக்கப்பட்டுள்ள தங்களது கண்காணிப்பு நிலைகளில் சிரியா படையினா் தாக்குதல் நடத்த துருக்கி எதிா்ப்பு தெரிவித்து வந்தது.
எனினும், அந்த எதிா்ப்பைப் பொருள்படுத்தாத சிரியா படையினா், இத்லிப் மாகாணத்தில் தொடா்ந்து தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனா்.
இந்தச் சூழலில், சிரியா ராணுவத் தாக்குதல் காரணமாக ஒரே நாளில் 33 துருக்கி வீரா்கள் உயிரிழந்ததும், அதனைத் தொடா்ந்து இரு தரப்பினரும் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதும் சா்வதேச நாடுகளை கவலையடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.