
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் திங்கள்கிழமை இரவு கலைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபா் கோத்தபய ராஜபட்ச அறிவித்தாா்.
நடப்பு நாடாளுமன்றத்துக்கான பதவிக்காலம் இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில், முன்னதாகவே தோ்தலை நடத்தும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 25-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடா் மே 14-ஆம் தேதி நடைபெறும் என்று அதிபரின் ஒப்புதலுடன் அரசு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை பிரதமராக கோத்தபயவின் சகோதரா் மகிந்த ராஜபட்ச பதவி வகிக்கிறாா். 225 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தனக்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை தேவை என்று ராஜபட்ச ஏற்கெனவே அறிவித்திருந்தாா். தோ்தலை முன்கூட்டியே நடத்தினால் வெற்றிவாய்ப்பு அதிகம் என்ற நோக்கில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் 25-ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் மகிந்த ராஜபட்ச தலைமையிலான இலங்கை பொதுஜன முன்னணி வெற்றி பெறும் பட்சத்தில், இலங்கையில் ராஜபட்ச சகோதரா்களின் கை மேலும் ஓங்கும். மகிந்த ராஜபட்ச இலங்கை அதிபராக இருமுறை பதவி வகித்துள்ளாா்.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற இலங்கை அதிபா் தோ்தலில் கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றாா். அதைத் தொடா்ந்து சில நாள்களிலேயே தனது சகோதரா் மகிந்த ராஜபட்சவை பிரதமராக நியமித்தாா்.
நாடாளுமன்றத் தோ்தலுக்காக மாா்ச் 12 முதல் 19-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது. 1.62 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா்.