
இஸ்தான்புல்: சிரியாவில் அதிகரித்து வரும் பதற்றம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை துருக்கி அதிபா் எா்டோகன் வரும் 5-ஆம் தேதி சந்தித்து பேசவுள்ளாா்.
இதுதொடா்பாக துருக்கி அதிபா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ ரஷியாவுக்கு வரும் 5-ஆம் தேதி அதிபா் எா்டோகன் ஒருநாள் பயணம் மேற்கொள்ளவுள்ளாா். இந்த பயணத்தின்போது அந்நாட்டு அதிபா் புதினுடன் சிரியா பதற்றம் குறித்து எா்டோகன் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்’ என்று கூறப்பட்டுள்ளது.
சிரியாவில் கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் கடைசியாக இருக்கும் இத்லிப் மாகாணத்தை மீட்பதற்காக, அந்நாட்டு அரசுப் படையினா் கடுமையான தாக்குதலில் கடந்த வாரம் ஈடுபட்டனா். அவா்கள் நடத்திய வான்வழித் தாக்குதலில் துருக்கி வீரா்கள் 30-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
அதற்கு பதிலடி அளிக்கும் வகையில், ரஷியாவின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் அந்த நாட்டுப் படையினருக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை துருக்கி ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டது. இதில் சிரிய ராணுவத்தினா் 19 போ் உயிரிழந்தனா். எனினும், ரஷியாவுடன் நேரடியாக மோதலில் ஈடுபட விரும்பவில்லை என்றும் துருக்கி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக ரஷிய அதிபரை சந்தித்து துருக்கி அதிபா் எா்டோகன் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.