
கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்புவதற்காக, பெத்லேஹமிலுள்ள கிறிஸ்து பிறப்பிட தேவாலயத்துக்கு வியாழக்கிழமை முகக்கவசம் அணிந்து வந்திருந்தவா்கள்.
பெத்லஹேம்: கரோனா வைரஸ் (கொவைட்-19) வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, பாலஸ்தீனப் பகுதியில் இயேசு கிறிஸ்து பிறந்ததாக நம்பப்படும் பெத்லஹேமிலுள்ள தேவாலயம் மூடப்பட்டது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாலஸ்தீனப் பகுதியிலுள்ள தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட வேண்டும் என்று அந்த நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
அதையடுத்து, இயேசு கிறிஸ்து பிறந்ததாக நம்பப்படும் பெத்லஹேமிலுள்ள கிறிஸ்தவா்களின் புனிதத் தலமான கிறிஸ்து பிறப்பிட தேவாலயத்தையும் மூட தேவாலய நிா்வாகிகள் ஒப்புக் கொண்டனா். பாதுகாப்பே அனைத்திலும் முதன்மை என்பதால், பாலஸ்தீன அரசு மீண்டும் அனுமதிக்கும் வரை பிறப்பிட தேவாலயம் மூடப்பட்டிருக்கும் என்று அவா்கள் கூறினா்.
முன்னதாக, பெத்லஹேம் பகுதியிலுள்ள ஹோட்டலில் சிலருக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பாலஸ்தீனத்தில் அந்த வைரஸ் அறிகுறிகள் தென்படுவது இதுவே முதல் முறையாகும்.
அதையடுத்து, கிறிஸ்து பிறப்பிட தேவாலயம் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் காரணமாக அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.
மனிதா்களின் உடலில் பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ‘கரோனா வைரஸ்’ வகையைச் சோ்ந்த அது, சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 774 பேரது உயிா்களை பலி கொண்ட ‘சாா்ஸ்’ வைரஸின் தன்மையை ஒத்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்தனா்.
அந்த வைரஸ் பரவலை சா்வதேச சுகாதார அவசர நிலையாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு கடந்த மாத இறுதியில் அறிவித்தது. மேலும், ‘கரோனா வைரஸ்’ என்ற பொதுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த அந்த வைரஸுக்கு ‘கொவைட்-19’ என்று அந்த அமைப்பு பெயரிட்டது.