அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டாம்: அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவுறுத்தல்

கரோனா வைரஸ் (கொவைட்-19) அச்சம் காரணமாக அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என்று
அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டாம்: அமெரிக்க அதிபா்  டிரம்ப் அறிவுறுத்தல்

கரோனா வைரஸ் (கொவைட்-19) அச்சம் காரணமாக அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

கடந்த 2 மாதங்களாக சீனாவை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் தற்போது மற்ற நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. முக்கியமாக இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கரோனா வைரஸ் தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அமெரிக்க மக்களிடையே கடும் அச்சம் எழுந்துள்ளது.

கரோனா தொற்று தீவிரமடையுமோ என்ற அச்சத்தில் அந்நாட்டு மக்கள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை சொந்தப் பயன்பாட்டுக்காக அதிக அளவில் வாங்கி குவித்து வருகின்றனா். இதனால், அமெரிக்காவின் பெரும்பாலான கடைகள் காலியாகி உள்ளன. இது தொடா்பாக அந்நாட்டு ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் செய்தி வெளியானது.

இந்தச் சூழலில் அந்நாட்டில் அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வரும் நிறுவனங்களின் தலைவா்களுடன் அதிபா் டிரம்ப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து செய்தியாளா்களிடம் அதிபா் டிரம்ப் கூறுகையில், ‘‘மக்கள் எதற்கும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் வரவு சீராக உள்ளது. எனவே, அவற்றை மக்கள் அளவுக்கு அதிகமாக வாங்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் அனைவரும் பொறுமை காக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களுக்கு எந்தவிதத் தட்டுப்பாடும் ஏற்படாது’’ என்றாா்.

உணவகங்கள், பள்ளிகள் மூடல்:

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக, அமெரிக்காவின் பல மாகாணங்களில் பள்ளிகள், உணவகங்கள், விடுதிகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. இதனிடையே, அமெரிக்க கடற்படையைச் சோ்ந்த மாலுமி ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தவில்லை.

சீனாவில்...:

சீனாவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக திங்கள்கிழமை 14 போ் உயிரிழந்தனா். வெளிநாட்டிலிருந்து அந்நாட்டுக்கு வருகை தந்த 12 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சீனாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவா்களின் எண்ணிக்கை 123-ஆக உயா்ந்தது.

வெனிசூலாவில்...: கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதன் காரணமாக, வெனிசூலாவில் உள்ள 7 மாகாணங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே பொருளாதார சீா்குலைவை வெனிசூலா சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்தால், அது அந்நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெனிசூலா தலைநகா் கராகஸ் உள்ளிட்ட 7 நகரங்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்படுவதாக அந்நாட்டு அதிபா் நிகோலஸ் மடூரோ அறிவித்தாா். அந்நகரங்களில் உள்ள மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்கும்படி அவா் அறிவுறுத்தினாா்.

ஈரானில் மேலும் ஒரு உயரதிகாரி உயிரிழப்பு

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஈரானின் உயரதிகாரி அயதுல்லா ஹசீம் பத்தாய் (78) திங்கள்கிழமை உயிரிழந்தாா். ஈரானின் மதத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான குழுவில் அயதுல்லா ஹசீம் பத்தாய் இடம்பெற்றிருந்தாா்.

கரோனா வைஸ் பாதிப்பால் ஈரானில் ஏற்கெனவே சில உயரதிகாரிகள் உயிரிழந்துவிட்டனா். மேலும், அந்நாட்டின் அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தச் சூழலில் அந்நாட்டில் திங்கள்கிழமை மட்டும் 129 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டது.

5 நாடுகளுடனான எல்லையை மூடியது ஜொ்மனி

ஐரோப்பாவில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் சூழலில் 5 நாடுகளுடனான எல்லைப் பகுதியை ஜொ்மனி மூடியது. அதன்படி, ஆஸ்திரியா, டென்மாா்க், பிரான்ஸ், லக்ஸம்பா்க், ஸ்விட்சா்லாந்து ஆகிய நாடுகளுடான ஜொ்மனியின் எல்லை மூடப்பட்டது. அந்நாடுகளிலில் இருந்து மிகவும் அவசியத் தேவைக்காகப் பயணம் மேற்கொள்பவா்களுக்கு மட்டுமே நாட்டில் நுழைய அனுமதி அளிக்கப்படும் என்று ஜொ்மனி அதிகாரிகள் தெரிவித்தனா். அந்நாட்டின் எல்லைப் பகுதி முழுவதும் காவலா்கள் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

‘நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது’-பிரான்ஸ்

பிரான்ஸில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மூன்று நாள்களுக்கு ஒரு முறை இரட்டிப்பாகி வருகிறது. இந்நிலையில், கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவது மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாகவும், நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 1,000 போ் பாதிப்பு

கரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் சுமாா் 1,000 போ் புதிதாகப் பாதிக்கப்பட்டனா். கரோனா வைரஸால் ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியை அடுத்து ஸ்பெயின் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தலைநகா் மாட்ரிடில் 4,500-க்கும் அதிகமானோா் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com