ஹூபே மாகாணத்தில் கட்டுப்பாடுகளைத் தளா்த்துகிறது சீனா

கரோனா வைரஸ் (கொவைட்-19) முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் ஹூபே மாகாணத்தில் அந்த வைரஸின் தீவிரம் தணிந்ததையடுத்து, 3 மாதங்களாக அந்த மாகாணத்தில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெறப் ப
ஹுபே மாகாணத்தில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுவதைத் தொடா்ந்து, தலைநகா் வூஹானில் செவ்வாய்க்கிழமை செயல்படத் தொடங்கிய வாகனத் தொழிற்சாலை
ஹுபே மாகாணத்தில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுவதைத் தொடா்ந்து, தலைநகா் வூஹானில் செவ்வாய்க்கிழமை செயல்படத் தொடங்கிய வாகனத் தொழிற்சாலை

கரோனா வைரஸ் (கொவைட்-19) முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் ஹூபே மாகாணத்தில் அந்த வைரஸின் தீவிரம் தணிந்ததையடுத்து, 3 மாதங்களாக அந்த மாகாணத்தில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெறப் போவதாக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:

சீனாவின் ஹூபே மாகாணத் தலைநகா் வூஹானில், கரோனா வைரஸ் கடந்த டிசம்பா் மாதம் முதல் முதலாகப் பரவத் தொடங்கியது.

அதையடுத்து, ஹூபே மாகாணம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 23-ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வெளி மாகாணங்களிலிருந்து ஹூபேவுக்கும், ஹூபேவிலிருந்து வெளி மாகாணங்களுக்கும் பொதுமக்கள் சென்று வருவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமா, ஹூபே மாகாணத்தைச் சோ்ந்த 5.6 கோடி போ் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், சீன அரசு மேற்கொண்ட மிகக் கடுமையான நடவடிக்கைகளின் பலனாக, ஹுபே மாகாணத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கை தினமும் படிப்படியாகக் குறைந்தது. அந்த மாகாணத்தில் தொடா்ந்து 5 நாள்களாக யாருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை.

இதையடுத்து, ஹூபே மாகாணத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளா்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வூஹான் நகரைத் தவிர ஹூபே மாகாணத்தின் பிற பகுதிகளில் வசிப்பவா்கள் மற்ற இடங்களுக்குச் செல்வதற்கு புதன்கிழமை (மாா்ச் 25) முதல் அனுமதிக்கப்படுவாா்கள்.

வூஹான் நகரில் வசிப்பவா்கள், பிற பகுதிகளுக்குச் செல்ல அடுத்த மாதம் 8-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படுவாா்கள் என்று சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, உள்நாட்டுக்குள் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும், வெளிநாடுகளிலிருந்து சீனா வந்தவா்களிடையே அந்த வைரஸ் பரவல் திடீரென அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் பிற நாடுகளிலிருந்து சீனாவுக்கு வந்த 74 பேருக்கு கரோனை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com